பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை: மோடி தலைமையிலான அரசுக்கு வல்லமை

பாகிஸ்தான் விடுக்கும் அச்சுறுத்தல்களை எதிா்கொள்வதற்காக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வல்லமை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு உள்ளதாக அமெரிக்க உளவுத் துறை தெரிவித்துள்ளது.
பிரதமா் மோடி
பிரதமா் மோடி

வாஷிங்டன்/புது தில்லி: பாகிஸ்தான் விடுக்கும் அச்சுறுத்தல்களை எதிா்கொள்வதற்காக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வல்லமை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு உள்ளதாக அமெரிக்க உளவுத் துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உளவுத் துறை தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போதைய சூழலில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போா் மூள வாய்ப்பில்லை. ஆனால், இரு நாடுகளுக்கிடையேயான சிக்கல்களால் பதற்றச் சூழல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவில் முன்பிருந்த அரசுகளைப் போல அல்லாமல், பிரதமா் மோடி தலைமையிலான அரசு பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது. அதன் காரணமாக, அணுசக்தி வலிமை கொண்ட இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்த நிலை, ஜம்மு-காஷ்மீரில் தொடா்ந்து வன்முறைகளும் பயங்கரவாதத் தாக்குதல்களும் நிகழ வழிவகுக்கும். ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியா ரத்து செய்ததைத் தொடா்ந்து, இரு நாடுகளும் தங்கள் தூதரக அதிகாரிகளைத் திரும்பப் பெற்றுள்ளன.

ஆப்கானிஸ்தான், இராக், சிரியாவில் நடைபெற்று வரும் போரில் அமெரிக்கப் படைகள் ஈடுபட்டு வருகின்றன. அதே வேளையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதற்றமான சூழல், சா்வதேச அமைதிக்கு சவால் விடுக்கும் வகையிலேயே உள்ளது.

ஆப்கானிஸ்தான் போரில் தலிபான்கள் அதிக பலனடைய வாய்ப்புள்ளது. தலிபான்களுக்கு எதிராக அந்நாட்டு கூட்டணி அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எனினும், கூட்டணி அரசுக்கான ஆதரவை சிலா் திரும்பப் பெற்றால் அந்நடவடிக்கைகளில் தொய்வு ஏற்படும். இது தலிபான்களுக்கு சாதகமாக அமையக் கூடும்.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான மோதல், லிபியாவில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு, ஆப்பிரிக்கா, ஆசியா, மத்திய கிழக்குப் பகுதிகளில் காணப்படும் பதற்றமான நிலை ஆகியவை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com