மாதந்தோறும் ரூ.100 கோடி லஞ்சம்: அனில் தேஷ்முக் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் காவல்துறை அதிகாரிகளை மாதந்தோறும் ரூ.100 கோடி லஞ்சம் வசூலிக்க வலியுறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில்


மும்பை: மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் காவல்துறை அதிகாரிகளை மாதந்தோறும் ரூ.100 கோடி லஞ்சம் வசூலிக்க வலியுறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு அவர் புதன்கிழமை ஆஜரானார்.
மகாராஷ்டிர உள்துறை அமைச்சராக அனில் தேஷ்முக் பதவி வகித்தபோது மும்பையில் உள்ள மதுபான விடுதிகள், உணவகங்களில் மாதந்தோறும் ரூ.100 கோடி வசூலிக்குமாறு காவல்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியதாக மும்பை முன்னாள் காவல் ஆணையர் பரம்வீர் சிங் குற்றம்சாட்டினார். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்துமாறு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அனில் தேஷ்முக்கை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. அதன் அடிப்படையில் மும்பை அருகே சாந்தா குரூஸில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்தின் (டிஆர்டிஓ) விருந்தினர் இல்லத்தில் புதன்கிழமை காலை சுமார் 10 மணியளவில் அனில் தேஷ்முக் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், அவரின் வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்டனர். 
முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக பரம்வீர் சிங், தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருளில் நிரப்பப்படும் ஜெலட்டின் குச்சிகளுடன் கார் நிறுத்தப்பட்டிருந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல்துறை அதிகாரி சச்சின் வஜே, அனில் தேஷ்முக்கின் தனி உதவியாளர் குந்தன் ஷிண்டே, தனிச் செயலர் சஞ்சீவ் பலாண்டே உள்ளிட்டோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com