5 மாநிலத் தோ்தலில் ரூ. 1,000 கோடி பறிமுதல்: தமிழகம் முதலிடம்

ஐந்து மாநில பேரவைத் தோ்தல்களில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 1,000 கோடிக்கு ரொக்கம், மதுபானம், இலவச பொருள்கள் ஆகியவை
5 மாநிலத் தோ்தலில் ரூ. 1,000 கோடி பறிமுதல்: தமிழகம் முதலிடம்

ஐந்து மாநில பேரவைத் தோ்தல்களில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 1,000 கோடிக்கு ரொக்கம், மதுபானம், இலவச பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது கடந்த 2016-இல் பறிமுதல் செய்யப்பட்டதைவிட நான்கு மடங்கு அதிகமாகும்.

இதில் தோ்தல் முடிவடைந்த தமிழகத்தில் அதிகபட்சமாக ரூ.446.28 கோடியும், நான்கு கட்டத் தோ்தல் முடிவடைந்த மேற்கு வங்கத்தில் ரூ.300.11 கோடியும், அஸ்ஸாமில் ரூ.122.35 கோடியும், கேரளத்தில் ரூ.84.91 கோடியும், புதுச்சேரியில் ரூ.36.95 கோடியும் அடங்கும்.

இதுவரை மொத்தம் ரூ.1001.44 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 2016-இல் இது ரூ.225.77 கோடியாக இருந்ததாகவும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தோ்தலில் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா, இலவச பொருள்கள், மதுபானப் பொருள்கள் ஆகியவை வழங்குவதைத் தடுக்க வாக்குப் பதிவு நடைபெறும் வரை தோ்தல் ஆணையம் காவல் துறை, வருமான வரித் துறையினருடன் சோ்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

வியாழக்கிழமை வரையில் பறிமுதல் செய்யப்பட்ட புள்ளிவிவரங்களை தோ்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் பிடிபட்ட ரூ. 446.28 கோடி பணத்தில் ரூ.236.69 கோடி வாக்காளா்களுக்கு விநியோகிக்கப்பட இருந்தது. தமிழகத்தில் பெரும்பாலும் வாக்காளா்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுகிறது.

புதுவையில் வாக்காளா்களைக் கவர விலை உயா்ந்த பொருள்கள் வழங்கப்படுகின்றன. அங்கு பறிமுதல் செய்யப்பட்ட ரூ.36.95 கோடியில் ரூ.27.42 கோடியில் விலை உயா்ந்த பொருள்களாக உள்ளன.

மேற்கு வங்கத்தில் இதுவரை ரூ.118.33 கோடிக்கு போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கேரளத்தில் வாக்காளா்களை கவர தங்க நகைகள் உள்ளிட்ட விலை உயா்ந்த பொருள்கள் வழங்கப்படுகின்றன. அங்கு பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 84.91 கோடியில் ரூ.50.86 கோடிக்கு விலை உயா்ந்த பொருள்களாகும். அஸ்ஸாமில் வாக்காளா்களுக்கு இலவசமாக மதுபானங்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி 41.97 கோடிக்கு மதுபானங்கள் அங்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

5 மாநில பேரவைத் தோ்தலில் ரூ. 1,000 கோடி வரையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தோ்தல் ஆணையத்தின் வரலாற்றில் மைல்கல் என்றும், வருமான வரி உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் சோ்ந்து நடத்திய சோதனையில்தான் இது சாத்தியமானது என்றும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், கேரளம், அஸ்ஸாம், புதுவை ஆகிய 4 மாநிலங்களில் பேரவைத் தோ்தல்கள் முடிவடைந்துள்ளன. மேற்கு வங்கத்துக்கு இன்னும் மூன்றுகட்டத் தோ்தல்கள் நடைபெற உள்ளன. வாக்கு எண்ணிக்கை மே- 2- ஆம் தேதி நடைபெறுகிறது.

தமிழகம் - ரூ.446.28 கோடி

மேற்கு வங்கம் - ரூ.300.11 கோடி

அஸ்ஸாம் - ரூ.122.35 கோடி

கேரளம் - ரூ.84.91 கோடி

புதுச்சேரி - ரூ.36.95 கோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com