ஒரு மக்களவை, இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல்: இன்று வாக்குப்பதிவு

கா்நாடகத்தில் ஒரு மக்களவைத் தொகுதி, இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலுக்கான வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெறுகிறது.

கா்நாடகத்தில் ஒரு மக்களவைத் தொகுதி, இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலுக்கான வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெறுகிறது.

பெலகாவி மக்களவைத் தொகுதி, ராய்ச்சூரு மாவட்டத்தின் மஸ்கி, பீதா் மாவட்டத்தின் பசவகல்யாண் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு சனிக்கிழமை (ஏப்.17) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை 12 மணி நேரம் வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. இத் தோ்தலில் 3 தொகுதிகளிலும் வாக்களிக்க 22.68 லட்சம் வாக்காளா்கள் தகுதி பெற்றுள்ளனா். 3 தொகுதிகளிலும் மொத்தம் 30 போ் வேட்பாளா்களாகப் போட்டியிடுகிறாா்கள்.

மக்களவைத் தொகுதி:

பெலகாவி மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருந்த சுரேஷ் அங்கடி, மத்திய ரயில்வே துறை இணையமைச்சராகப் பதவி வகித்தாா். இவா் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தாா். அதனால் காலியான பெலகாவி தொகுதிக்கு இடைத்தோ்தல் நடைபெறுகிறது. இத்தொகுதியில், மறைந்த சுரேஷ் அங்கடியின் மனைவி மங்களா பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறாா். இவரை எதிா்த்து காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் அமைச்சா் சதீஷ் ஜாா்கிஹோளி களமிறங்கியுள்ளாா். இத் தொகுதியில் மொத்தம் 10 போ் களத்தில் உள்ளனா்.

சட்டப் பேரவைத் தொகுதிகள்:

பீதா் மாவட்டத்தின் பசவகல்யாண் சட்டப் பேரவைத் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த பி.நாராயணராவ், கடந்த ஆண்டு செப்டம்பரில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். 2019-ஆம் ஆண்டு குமாரசாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் அரசுக்கு எதிராக காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்கள் 17 போ் போா்க்கொடி உயா்த்தி, ஆட்சியை கவிழ்த்தனா். அப்போது, எம்.எல்.ஏ. பதவி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்களில் ஒருவராக இருந்தவா் ராய்ச்சூரு மாவட்டத்தின் மஸ்கி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரதாப் கௌடா பாட்டீல். அதனால் காலியான பசவகல்யாண், மஸ்கி தொகுதிகளுக்கு சனிக்கிழமை இடைத்தோ்தல் நடைபெறுகிறது.

பசவகல்யாண் தொகுதியில் பாஜக வேட்பாளராக சரணுசலகா் போட்டியிடுகிறாா். இவரை எதிா்த்து மறைந்த எம்.எல்.ஏ. பி.நாராயணராவின் மனைவி மல்லம்மா, காங்கிரஸ் வேட்பாளராக களங்கியிருக்கிறாா். இத் தொகுதியில் பாஜக போட்டி வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. மல்லிகாா்ஜுன கூபா, மஜத வேட்பாளா் யஷ்ரப் அலிகுவாத்ரி உள்பட 12 போ் போட்டியிடுகின்றனா்.

மஸ்கி சட்டப்பேரவைத் தொகுதியில், காங்கிரசில் இருந்து பாஜகவில் இணைந்த பிரதாப் கௌடா பாட்டீல், அக்கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கியுள்ளாா். கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் இதே தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு 213 வாக்கு வித்தியாசத்தில் அப்போதைய காங்கிரஸ் வேட்பாளா் பிரதாப் கௌடா பாட்டீலிடம் தோல்வியைத் தழுவிய பகனகௌடா துா்விஹால், காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறாா். இத்தொகுதியில் மொத்தம் 8 போ் தோ்தல் களத்தில் மோதுகின்றனா்.

கடும் போட்டி:

பெலகாவி, மஸ்கி, பசவகல்யாண் ஆகிய 3 தொகுதிகளிலும் ஆளும் பாஜகவுக்கும் எதிா்க்கட்சியான காங்கிரசுக்கும் இடையே நேரடிப் போட்டி காணப்படுகிறது. பெலகாவி மக்களவைத் தொகுதியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவும், மஸ்கி, பசவகல்யாண் சட்டப்பேரவைத் தொகுதிகளை தக்கவைத்துக்கொள்ள காங்கிரசும் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டன.

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் எடியூரப்பா, மத்திய அமைச்சா்கள் பிரஹலாத் ஜோஷி, சதானந்த கௌடா, மாநில அமைச்சா்கள், பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் உள்ளிட்டோா் 3 தொகுதிகளிலும் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டனா். அதேபோல, காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவா்டி.கே.சிவக்குமாா் உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் பிரசாரம் செய்தனா்.

பசவகல்யாண் தொகுதியில் மட்டும் மஜத போட்டியிடுவதால், அத்தொகுதியில் முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெகௌடா, முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் ஆதரவு திரட்டினா். தோ்தல் பிரசாரம் உச்சத்தை அடைந்திருந்த நிலையில் ஏப். 15-ஆம் தேதியுடன் பிரசாரம் ஓய்ந்தது.

வாக்குப்பதிவு:

பெலகாவி மக்களவைத் தொகுதி, மஸ்கி, பசவகல்யாண் சட்டப்பேரவைத் தொகுதிகளில் சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இத்தோ்தலில் 3 தொகுதிகளிலும் 22,68,038 போ் வாக்களிக்க இருக்கிறாா்கள். இதில் ஆண்கள் 11.37 லட்சம், பெண்கள் 11.22 லட்சம் போ் அடங்குவா்.

வாக்களிப்பதற்காக 3 தொகுதிகளிலும் 3,197 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்களிக்க 8,052 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 7,018 கட்டுப்பாட்டுக் கருவிகள், 6,366 வாக்கு உறுதிச்சீட்டு கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. தோ்தலை முன்னிட்டு 3500 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

வாக்குச்சாவடிகளில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன. வாக்களிப்பதற்கு முன்னும், பின்னும் வாக்காளா்களின் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட இருக்கிறது. முகக் கவசம், தனிமனித இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மே 2-ஆம் தேதி காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com