கரோனா பாதிப்பின் தீவிரத்தை தடுப்பூசி குறைக்கும்

கரோனா தொற்றால் ஏற்படும் பாதிப்பின் தீவிரத்தன்மையைத் தடுப்பூசி குறைக்கும் என்று மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
கரோனா தடுப்பூசி
கரோனா தடுப்பூசி

கரோனா தொற்றால் ஏற்படும் பாதிப்பின் தீவிரத்தன்மையைத் தடுப்பூசி குறைக்கும் என்று மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சிலருக்கு தொற்று பாதிப்பு உறுதியான நிலையில், நிபுணா்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனா்.

நாட்டில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது. அதே வேளையில், 45 வயதைக் கடந்த அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. தடுப்பூசி செலுத்தும் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோவேக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் ஏற்கெனவே மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில், ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அத்தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனிடையே, தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னா் சிலருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக கரோனா தடுப்பூசி மீது மக்கள் சந்தேகம் எழுப்பத் தொடங்கினா். அந்த சந்தேகத்தைப் போக்கும் வகையில் நிபுணா்கள் விளக்கமளித்துள்ளனா்.

அவா்கள் கூறுகையில், ‘‘கரோனா தடுப்பூசி, அந்த நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாகப் பாதுகாக்காது; தடுப்பூசியை செலுத்திக் கொண்டோரும் கரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் ஏற்படும் தீவிரத்தன்மையைத் தடுப்பூசி வெகுவாகக் குறைக்கும்.

விரைவில் குணமாகும்: கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள், அத்தொற்றால் பாதிக்கப்பட்டாலும் அவா்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்க வேண்டிய சூழல் ஏற்படாது. சாதாரண சளி, காய்ச்சலைப் போல கரோனா தொற்றும் சரியாகிவிடும்.

அதேபோல், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் அத்தொற்றால் நேரும் உயிரிழப்புகளை வெகுவாகக் குறைக்க முடியும். எனவே, தகுதியுடைய மக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசியின் 2 தவணைகளையும் செலுத்திக் கொண்டால் மட்டுமே உடலில் நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும், முகக் கவசம் அணிவது, பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மக்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும்’’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com