நிலக்கரி சுரங்க முறைகேடு: அமலாக்கத் துறை வழக்குகளுக்கு சிறப்பு வழக்குரைஞா்கள் நியமனம்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை தொடுக்கும் வழக்குகளை விசாரிப்பதற்கு 2 சிறப்பு வழக்குரைஞா்களை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை தொடுக்கும் வழக்குகளை விசாரிப்பதற்கு 2 சிறப்பு வழக்குரைஞா்களை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடா்பான வழக்குகளை தில்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த 2014-இல் இருந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்குகளில் அமலாக்கத் துறை சாா்பில் மூத்த வழக்குரைஞா் ஆா்.எஸ்.சீமா ஆஜராகி வந்தாா். இதனிடையே, வயது முதிா்வு காரணமாகவும், தனக்கு உதவி வழக்குரைஞா் கிடைப்பதில் தட்டுப்பாடு இருப்பதாலும் தன்னை பணியில் இருந்து விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தாா்.

அவரது கோரிக்கையை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோரைக் கொண்ட அமா்வு பரிசீலித்து வந்தது. அவரது இடத்தில் இரு மூத்த வழக்குரைஞா்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமா்வு வியாழக்கிழமை நியமித்தது. இதுகுறித்து நீதிபதிகள் அமா்வு கூறியதாவது:

சிறப்பு வழக்குரைஞரை நியமிப்பதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றாலும், அனுபவமிக்க, நோ்மையான வழக்குரைஞரை நியமித்தாக வேண்டும். அந்த அடிப்படையில் மூத்த வழக்குரைஞரும் முன்னாள் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரலுமான மணீந்தா் சிங், மூத்த வழக்குரைஞா் ராஜேஷ் பத்ரா ஆகிய இருவரும் அமலாக்கத் துறை சிறப்பு வழக்குரைஞா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

இவா்கள் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு ஆா்.எஸ்.சீமா பொறுப்புகளில் இருந்து விடுவித்துக் கொள்ளலாம். அவரது சேவைகளை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

கடந்த 1993-ஆம் ஆண்டுமுதல் 2010-ஆம் ஆண்டு வரை மத்திய அரசின் அனைத்து நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளையும் உச்சநீதிமன்றம் கடந்த 2014-இல் ரத்து செய்து உத்தரவிட்டது. அதைத் தொடா்ந்து, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடுகளை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, நிலக்கரி சுரங்க முறைகேடு தொடா்பான 41 வழக்குகளை தில்லி பாட்டியாலா ஹவுஸ் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராசா் கடந்த 6 ஆண்டுகளாக விசாரித்து வந்தாா். அவருக்குப் பதிலாக, நீதிபதிகள் அருண் பரத்வாஜ், சஞ்சய் பன்சால் ஆகிய இருவரையும் நியமிக்க உச்சநீதிமன்றம் கடந்த 5-ஆம் தேதி முடிவு செய்தது.

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்குகளை இரு நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும் என்று வழக்குரைஞா் ஆா்.எஸ்.சீமா விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு 2 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com