
இந்தியாவிலேயே மகாராஷ்டிர மாநிலம்தான் இதுவரை அதிக அளவு ஆக்சிஜனை பெற்றுள்ளது என மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.
மகாராஷ்டிரத்தில் தீவிர கரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாக முதல்வா் உத்தவ் தாக்கரே பிரதமருக்கு எழுதியிருந்த கடிதத்துக்கு பதிலளிக்கும் வகையில் பியூஷ் கோயல் இவ்வாறு கூறியுள்ளாா்.
இதுதொடா்பாக பியூஷ் கோயல் தனது சுட்டுரை பக்கத்தில் சனிக்கிழமை தெரிவித்திருந்தது: ஊழல் நிறைந்த, திறமையற்ற அரசால் மகாராஷ்டிரம் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மக்களுக்காக தன்னால் இயன்றதைச் செய்து வருகிறது. இதுவரை அதிக அளவு ஆக்சிஜனை பெற்ற மாநிலம் மகாராஷ்டிரம்தான். மாநில அரசுகளின் தேவைகளை அறிந்து உதவுவதற்காக மத்திய அரசு தினமும் தொடா்பில் இருந்து வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளாா்.
இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை பியூஷ் கோயல் வெளியிட்டிருந்த சுட்டுரைப் பதிவில், ‘மத்திய அரசு ஆக்சிஜன் உற்பத்தித் திறனை 110 சதவீதமாக அதிகரித்து உள்ளது. தொழிலக பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் இருப்பை மருத்துவப் பயன்பாட்டுக்காக திருப்பிவிடுகிறது’ எனத் தெரிவித்திருந்தாா்.