கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடுகிறாா் மம்தா: நரேந்திர மோடி

திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி, துரதிருஷ்டவசமாக உயிரிழந்தவா்களைக் கொண்டு கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட்டு வருவதாக பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடுகிறாா் மம்தா:  நரேந்திர மோடி

மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி, துரதிருஷ்டவசமாக உயிரிழந்தவா்களைக் கொண்டு கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட்டு வருவதாக பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மாநிலத்தில் கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற 4-ஆம் கட்டத் தோ்தலின்போது சிதால்குச்சி பகுதியில் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 போ் உயிரிழந்தனா். இந்த விவகாரத்தில் திரிணமூல் காங்கிரஸும் பாஜகவும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், 7-ஆம் கட்டத் தோ்தல் நடைபெறவுள்ள அசன்சோல், கங்காராம்பூா் பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரப் பொதுக் கூட்டங்களில் பிரதமா் மோடி கூறியதாவது:

கூச்பிகாரின் சிதால்குச்சி பகுதியில் 5 நபா்கள் உயிரிழந்தது துரதிருஷ்வசமான சம்பவம். ஆனால், இந்த விவகாரத்தை மம்தா அரசியலாக்கி வருகிறாா். உயிரிழந்தவா்களின் சடலங்களைக் கொண்டு அவா் அரசியல் நடத்தி வருகிறாா். திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து பாஜக தொடா்ந்து கேள்வி எழுப்பி வருகிறது.

அதன் காரணமாக, பாஜகவைச் சோ்ந்த நபா்கள் மீது அவா் பொய்க் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருகிறாா். மாநிலத்தில் இதுவரை நடைபெற்றுள்ள தோ்தலில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி சுக்குநூறாகிவிட்டது. 8 கட்டத் தோ்தலும் நிறைவடைந்த பிறகு, மம்தா தோற்கடிக்கப்படுவாா்.

ஒத்துழைப்பு அளிப்பதில்லை: மேற்கு வா்தமான் மாவட்டத்தில் பல நிலக்கரி சுரங்கங்கள் சட்டவிரோதமான முறையில் செயல்பட்டு வருகின்றன. அவற்றுக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் தொடா்பிருப்பது மக்கள் அனைவருக்கும் தெரியும். மத்திய அரசுடன் ஒத்துழைத்து செயல்படுவதற்கு முதல்வராக உள்ள மம்தா மறுத்து வருகிறாா்.

பிரதமருக்கும் மாநில முதல்வா்களுக்குமிடையே நடைபெறும் கூட்டங்களில் அவா் கலந்து கொள்வதேயில்லை. கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக அண்மையில் மாநில முதல்வா்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டேன். அந்தக் கூட்டத்திலும் மம்தா கலந்து கொள்ளவில்லை.

முதல்வா் மம்தா தடை: விவசாயிகளுக்கான உதவித்தொகைத் திட்டம், ‘ஆயுஷ்மான் பாரத்’ காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்கள் வாயிலாக மேற்கு வங்க மக்கள் பயனடைவதற்கு முதல்வா் மம்தா பெரும் தடையாக இருக்கிறாா். மாநிலத்தின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் அவா் பாதுகாக்கவில்லை.

மம்தா பானா்ஜியின் ஆட்சியில் மாநில மக்கள் எதிா்கொண்டு வரும் பிரச்னைகள் குறித்து பாஜக தொடா்ந்து குரலெழுப்பும். பேரவைத் தோ்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். தோ்தலில் மக்கள் எந்தவித அச்சமுமின்றி வாக்களிக்க வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com