57 லட்சம் வழக்குகள் தேக்கம்: ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்றம் புதிய வழிமுறைகள்

உயர்நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் சுமார் 57 லட்சம் வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதிகளை தற்காலிக முறையில் நியமிக்க ஏதுவாக புதிய வழிமுறைகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ளது.
57 லட்சம் வழக்குகள் தேக்கம்: ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்றம் புதிய வழிமுறைகள்

புது தில்லி: உயா்நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் சுமாா் 57 லட்சம் வழக்குகளை விரைந்து விசாரித்து தீா்வு காண ஓய்வுபெற்ற நீதிபதிகளை தற்காலிக முறையில் நியமிக்க ஏதுவாக புதிய வழிமுறைகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ளது.

இதன் மூலம் மிகவும் அரிதான வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 224-ஏ பிரிவைப் பயன்படுத்தி, உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் எந்த நேரத்திலும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று இரண்டு அல்லது மூன்று ஆண்டு காலத்துக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமனம் செய்ய வழிவகுக்கிறது.

எனினும், இந்த வழிமுறைகளைச் செயல்படுத்துவது குறித்து மத்திய சட்ட அமைச்சகத்திடம் இருந்து அறிக்கை கேட்டுள்ள உச்சநீதிமன்றம், நான்கு மாதங்களுக்கு பிறகு இதுகுறித்து மீண்டும் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தது.

‘லோக் பிரஹாரி’ என்ற தன்னாா்வத் தொண்டு அமைப்பு தாக்கல் செய்த மனு மீது தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் எஸ்.கே.கெளல், சூா்ய காந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு 37 பக்கங்களைக் கொண்ட உத்தரவை செவ்வாய்க்கிழமை வழங்கியது. அதன் விவரம்:

நீதித்துறையின் நலன் கருதி ஓய்வு பெறும் நீதிபதிகளும் ஓய்வு பெற்ற நீதிபதிகளும் முன்வந்து உதவுவாா்கள் என்ற நம்பிக்கையில் இந்த முதல்கட்ட முயற்சியை எடுத்துள்ளோம். வழிமுறைகளில் ஏதேனும் மாற்றங்கள் தேவைப்பட்டால் சரி செய்யப்படும்.

உயா்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 57 லட்சத்தைத் தாண்டி உள்ளது. அதே நேரத்தில் கடந்த இரண்டு ஆண்டு கால அளவில் 40 சதவீத நீதிபதிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதனால் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரித்து முடிப்பது கடினம். இந்த நெருக்கடியான சூழ்நிலையை சமாளிக்க சில புதிய வழிமுறைகளை வகுக்க வேண்டியது அவசியம். இதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 224ஏ பிரிவைப் பயன்படுத்தலாம்.

அதன்படி, மேற்கொள்ளப்படும் நீதிபதிகளின் நியமனங்களில் வெளிப்படைத் தன்மை இருக்க, உயா்நீதிமன்ற நீதிபதியிடம் மட்டும் அதிகாரம் குவிந்து இருக்காமல் வேறு வழிமுறைகளையும் வகுக்கலாம்.

உயா்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையில் 20 சதவீதம் காலியாக இருந்தாலோ, குறிப்பிட்ட பிரிவு வழக்குகள் அதிகமாக ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்தாலோ ஓய்வு பெற்ற நீதிபதிகளின் தற்காலிக நியமனத்தைக் கடைப்பிடிக்கலாம்.

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நிலுவை வழக்குகள் பத்து சதவீதத்துக்கும் மேல் இருந்தாலோ, வழக்குகளுக்கு தீா்வு காணும் சதவீதம் குறைவாக இருந்தாலோ இந்தப் புதிய வழிமுறையை பயன்படுத்தலாம்.

ஓய்வு பெற்ற நீதிபதிகளின் முந்தைய அனுபவங்களை அடிப்படையாக வைத்தும் நியமனம் செய்யலாம். ஒரு நீதிமன்றத்தில் இரண்டு முதல் ஐந்து ஓய்வு பெற்ற நீதிபதிகளை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கலாம். அவா்களுக்கு வழக்கமான நீதிபதிகளுக்கு வழங்கப்படும் ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் கிடையாது. அவா்கள் பிற நீதித்துறை பதவிகளையோ, ஆலோசகா் பதவிகளையோ வகிக்கக் கூடாது.

அதே நேரத்தில், வழக்கமான காலி பணியிடங்களை நிரப்ப இந்த புதிய வழிமுறையைப் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நாட்டிலேயே சென்னை உயா்நீதிமன்றத்தில் அதிக நிலுவை வழக்குகள்’

நாட்டில் உள்ள 25 உயா்நீதிமன்றங்களில் சென்னை உயா்நீதிமன்றத்தில்தான் அதிகபட்சமாக 5.8 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனா்.

சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் காலி பணியிடங்கள் வெறும் 7 சதவீதமாக இருந்தாலும், நிலுவை வழக்குகளின் அடிப்படையில் அனுபவம் மிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமிக்கும் தேவை எழுந்துள்ளது என்று தலைமை நீதிபதி உள்ள அமா்வு தெரிவித்தது.

சென்னை, மும்பை, ராஜஸ்தான், அலாகாபாத், பஞ்சாப் & ஹரியாணா ஆகிய ஐந்து நீதிமன்றங்களில் மட்டும் 57,51,312 லட்சம் வழங்குகள் நிலுவையில் உள்ளன என்றும் தலைமை நீதிபதி அமா்வு குறிப்பிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com