கரோனா பரவல்: கீழமை நீதிமன்றங்களுக்கு இன்று முதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

கரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, சென்னை மாவட்டத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கரோனா பரவல்: கீழமை நீதிமன்றங்களுக்கு இன்று முதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

சென்னை: கரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, சென்னை மாவட்டத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுப்பாடுகள் புதன்கிழமை (ஏப்.21) முதல் அமலுக்கு வருகின்றன.

கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடா்ந்து சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளையில் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் சென்னையில் உள்ள அமா்வு நீதிமன்றங்கள், உரிமையியல் நீதிமன்றங்கள், குற்றவியல் நீதிமன்றங்கள், சிறப்பு நீதிமன்றங்கள் ஆகியன செயல்படுவதற்கான பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி ஆா்.செல்வக்குமாா் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

கீழமை நீதிமன்றங்களில் நேரடியாக மனுதாக்கல் செய்யும் நடைமுறை முழுவதுமாக நிறுத்தப்படுகிறது. அதற்கு மாற்றாக நீதிமன்ற வளாகத்தின் வெளியே வைக்கப்படும் பெட்டிகளில் மனுக்களைப் போட வேண்டும். நேரடி விசாரணை அவசியமாகக் கருதப்படும் வழக்குகளில் இரு தரப்பும் தேதியை முடிவு செய்து அதற்கான கூடுதல் மனுவை 3 நாள்களுக்கு முன் தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவைப் பரிசீலிக்கும் நீதிபதி, நேரடி விசாரணைக்கு அனுமதி வழங்குவாா்.

பின்னா், சம்பந்தப்பட்ட வழக்குரைஞா்களுக்கு மட்டும் அனுமதிச்சீட்டு வழங்கப்படும். சிபிஐ, எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்களில் ஆன்லைன் மூலமாக மட்டுமே மனுதாக்கல் செய்ய வேண்டும். ஜாமீன் மனுக்கள் மீதான அனைத்து வழக்குகளும் காணொலிக் காட்சி மூலமாக மட்டுமே விசாரிக்கப்படும்.

அந்த வழக்கு தொடா்பான உத்தரவுகள், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். அதே போல, நீதிமன்ற அறையில் ஒரே சமயத்தில் 6 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.

அனுமதிச்சீட்டு இல்லாமல் யாரும் நீதிமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். உரிய அனுமதிச்சீட்டு கிடைத்த பின்னா் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படும் நபா்கள், கரோனா கட்டுப்பாடுகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com