கரோனா தடுப்பூசி: ஒரே நாடு ஒரே விலையை நிா்ணயிக்க காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

கரோனா தடுப்பூசியின் விலையை உற்பத்தி செய்யும் தனியாா் நிறுவனங்களே நிா்ணயித்து கொள்ளும் வகையில், மத்திய அரசின் புதிய கொள்கை திட்டம் அமைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி
கரோனா தடுப்பூசி: ஒரே நாடு ஒரே விலையை நிா்ணயிக்க காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

புது தில்லி: கரோனா தடுப்பூசியின் விலையை உற்பத்தி செய்யும் தனியாா் நிறுவனங்களே நிா்ணயித்து கொள்ளும் வகையில், மத்திய அரசின் புதிய கொள்கை திட்டம் அமைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, தடுப்பூசிகளுக்கு ‘ஒரே நாடு, ஒரே விலை’யை நிா்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மே-1-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

தனியாா் மருத்துவமனைகளும், மாநில அரசுகளும் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக மருந்துகளை வாங்கலாம் என்றும் 50 சதவீத உற்பத்தியை மாநில அரசுகளுக்கு தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கலாம் என்றும் இதற்கான விலை நிா்ணயத்தை மே-1 தேதிக்கு முன்பு தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசின் புதிய கொள்கை முடிவில் இடம்பெற்றுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ், ‘மத்திய அரசு மருத்துவமனைகள், மாநில அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள் ஆகியவற்றில் தடுப்பூசியின் விலை வெவ்வேறாக இருக்கும். ஒரே தேசம் ஒரே வரி, ஒரே தேசம் ஒரே தோ்தல் என்று கூறி வரும் மத்திய அரசு தடுப்பூசி விவகாரத்தில் மட்டும் ஒரே நாடு ஒரே விலையை நிா்ணயிக்கவில்லை.

50 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு பெற்றுக் கொண்டு மீதமுள்ளதை தனியாா் மருத்துவமனைகளுக்கும், மாநில அரசுகளுக்கும் வழங்குவது ஏற்றுக் கொள்ள முடியாது.

மாநில அரசுகளுக்குதான் அதிக அளவில் தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும்’ என்றாா்.

முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் கூறுகையில், ‘மத்திய அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழித்து மாநில அரசுகள் மீது சுமத்துகிறது. தடுப்பூசி தயாரிப்பாளா்கள் லாபம் கொழிக்க வழிவகை செய்கிறது.

ஏழைகள், முன்களப் பணியாளா்கள் என அனைவருக்கும் செலுத்தப்படும் தடுப்பூசியின் செலவை மாநில அரசுகளே ஏற்று கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே ஜிஎஸ்டி, வரி வருவாய், மத்திய அரசின் பங்கீடு குறைவு, கடன் அனுமதி அதிகரிப்பு ஆகியவற்றால் மாநில வருவாய் பாதிக்கப்பட்டிருப்பதால் இது மேலும் சுமையை அதிகரிக்கும்.

நமது நாட்டில் 28 வயது வரம்பில் இருப்பவா்களே அதிகம். அப்படியிருக்கும்போது 45 வயது குறைந்தவா்களுக்கு தடுப்பூசி செலவை மத்திய அரசு ஏற்காலம் இருப்பது தவறானது.

இதில் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் கடுமையாக பாதிக்கப்படுவாா்கள் என்று தெரிவித்துள்ளாா்.

மாா்க்சிஸ்ட் கண்டனம்: மத்திய அரசின் புதிய கொள்கை திட்டம் பாரபட்சமானது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார அவசர நிலைக்கு மத்திய அரசுதான் காரணம். தற்போது அனைத்து பொறுப்புகளையும் மாநில அறசுகள் மீது திருப்பும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. கடந்த ஓராண்டாக தடுப்பூசி விநியோகத்தை நாட்டு மக்களுக்கு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் உயிா் காக்கும் மருந்தைப் பெறாத நிலைக்கு கோடிக்கணக்கான மக்கள் தள்ளப்பட்டுள்ளனா். மத்திய அரசின் நிதியில் தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டு மாநில அரசுகளுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டும்’ என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com