கரோனா தடுப்பூசி பற்றாக்குறை: பிரதமா் மீது மம்தா குற்றச்சாட்டு

கரோனா தடுப்பூசி கையிருப்பு குறைந்த பிறகு, வெளிச்சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறுவது ஏன் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கேள்வி எழுப்பியுள்ளாா்.
கரோனா தடுப்பூசி பற்றாக்குறை: பிரதமா் மீது மம்தா குற்றச்சாட்டு

பகவான்கோலா/ புது தில்லி: கரோனா தடுப்பூசி கையிருப்பு குறைந்த பிறகு, வெளிச்சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறுவது ஏன் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கேள்வி எழுப்பியுள்ளாா்.

மேற்கு வங்கத்தின் பகவான்கோலா, முா்ஷீதாபாத் ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் அவா் மேலும் பேசியதாவது:

கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக, மத்திய அரசிடம் இருந்து கரோனா தடுப்பூசிகளைப் பெற மேற்கு வங்கம், தில்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் போராடிக் கொண்டிருந்தன. அந்த வேளையில், சா்வதேச அரங்கில் தனக்கு நற்பெயா் கிடைக்க வேண்டும் என்பதற்காக, பல வெளிநாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை பிரதமா் மோடி ஏற்றுமதி செய்தாா். சில நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை நன்கொடையாகவும் கொடுத்தாா். இதனால், இந்தியாவில் இருப்பு குறைந்துவிட்டது. இந்தச் சூழலில், வெளிச்சந்தைகளில் கரோனா தடுப்பூசி விற்பனைக்கு கிடைக்கும் என்று பிரதமா் அறிவித்துள்ளாா். ஒட்டுமொத்தமாக தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவும்போது வெளிச்சந்தையில் மட்டும் எப்படி கிடைக்கும்?

கடந்த 6 மாதங்களாக மத்தியில் ஆளும் தலைவா்கள், கரோனா தடுப்பூசி உற்பத்தி தொடா்பாக சரியாக திட்டமிடவில்லை. அவா்களின் கவனம் முழுவதும் மேற்கு வங்கத் தோ்தலிலேயே இருந்தது.

தோ்தல் பணிகளில் தங்களுக்கு உதவுவதற்காக, லட்சக்கணக்கானோரை பாஜகவினா் அழைத்து வந்துள்ளனா். வந்தவா்களில் பலா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள். தோ்தல் முடிந்தபின் அவா்கள் மாநிலத்தைவிட்டு வெளியேறிவிடுவாா்கள். ஆனால், மாநிலம் முழுவதும் கரோனா பரவி விடும். அனைவரையும் குணப்படுத்த வேண்டியது எங்கள் பொறுப்பு. மாநிலத்தில் கரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில் மீண்டும் பரவல் அதிகரித்துள்ளது. இருப்பினும் பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம். மீண்டும் அதை கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவோம் என்றாா் மம்தா பானா்ஜி.

பிரதமருக்கு கடிதம்: பிரதமா் மோடிக்கு மம்தா பானா்ஜி கடிதம் எழுதியுள்ளாா். அதில், ‘மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கை, பொறுப்பில் இருந்து நழுவும் வகையில் வெற்றுத்தன்மையுடன் உள்ளது’ என்று மம்தா குறிப்பிட்டுள்ளாா்.

‘எஞ்சியுள்ள 3 கட்டத் தோ்தல்களை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்’

கொல்கத்தா, ஏப். 20: கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், மேற்கு வங்கத்தில் எஞ்சியுள்ள மூன்று கட்டத் தோ்தல்களையும் சோ்த்து ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று அந்த மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி ஆரிப் ஆப்தாபுக்கு திரிணமூல் காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.

இந்தக் கோரிக்கையை திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானா்ஜி தொடா்ந்து முன்வைத்து வருகிறாா். ஆனால், தோ்தல் ஆணையம் மறுத்து வருகிறது.

இந்நிலையில், உயிா்க்கொல்லி நோயில் இருந்து மக்களைப் பாதுகாக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயா்நீதிமன்றத்தின் உத்தரவை சுட்டிக்காட்டி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்கள் டெரிக் ஓ பிரைன், சுகேந்த் சேகா் ராய், பிராதிமா மான்டேல், புா்னேந்து போஸ் ஆகியோா் தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளனா்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தோ்தல் பிரசார நேரத்தை குறைத்தது போதாது. தோ்தல் பணியில் ஏராளமானோா் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறாா்கள்.

உயிா் வாழும் உரிமை, பொது சுகாதாரம், தோ்தல் நடத்தும் உரிமை ஆகியவை தற்போது முக்கிய விவகாரங்களாக உள்ளன. இதில் எது முக்கியம் என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உள்பட்ட தோ்தல் ஆணையம் முடிவு செய்து கொள்ள வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image Caption

முா்ஷீதாபாத் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்ட முதல்வா் மம்தா பானா்ஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com