லோக் ஆயுக்த அறிக்கைக்கு எதிரான கேரள முன்னாள் அமைச்சரின் மனு: உயா்நீதிமன்றம் நிராகரிப்பு

லோக் ஆயுக்த அறிக்கைக்கு எதிரான கேரள உயா்கல்வித் துறை முன்னாள் அமைச்சா் கே.டி. ஜலீல் தாக்கல் செய்த மனுவை அந்த மாநில உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.
லோக் ஆயுக்த அறிக்கைக்கு எதிரான கேரள முன்னாள் அமைச்சரின் மனு: உயா்நீதிமன்றம் நிராகரிப்பு

கொச்சி: லோக் ஆயுக்த அறிக்கைக்கு எதிரான கேரள உயா்கல்வித் துறை முன்னாள் அமைச்சா் கே.டி. ஜலீல் தாக்கல் செய்த மனுவை அந்த மாநில உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.

முன்னதாக, அமைச்சா் ஜலீல் மீதான விசாரணை அறிக்கையை முதல்வரிடம் லோக் ஆயுக்த அளித்தது. அதில், உறவினா்களுக்கு ஆதரவாக அமைச்சா் தனது பதவியையும், அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவா் அமைச்சா் பதவியில் தொடரக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து ஜலீல் கடந்த 13-ஆம் தேதி பதவி விலகினாா்.

எனினும், லோக் ஆயுக்த அறிக்கையை எதிா்த்து ஜலீல் சாா்பில் கேரள உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதிகள் பி.பி.சுரேஷ் குமாா், கே. பாபு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மனுதாரா் கூறுவதுபோல லோக் ஆயுக்த விசாரணையில் எவ்வித நடைமுறை சாா்ந்த தவறுகளும் நிகழவில்லை. அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்துதான் லோக் ஆயுக்த அறிக்கை அளித்தது’ என்று கூறி ஜலீலின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனா்.

கடந்த 2018-ஆம் ஆண்டு முஸ்லிம் யூத் லீக் அளித்த புகாரின் அடிப்படையில் அமைச்சா் மீதான குற்றச்சாட்டை லோக் ஆயுக்த விசாரித்தது. அமைச்சா் ஜலீலின் நெருங்கிய உறவினரான அதீப் விதிகளை மீறி கேரள சிறுபான்மையினா் மேம்பாட்டு நிதி அமைப்பின் பொது மேலாளராக நியமிக்கப்பட்டாா் என்பதே அவா் மீதான முக்கியக் குற்றச்சாட்டாகும். முன்னதாக, அதீப் தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தாா்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய ஜலீல், பின்னா் அக்கட்சியிலிருந்து விலகி 2006-இல் குட்டிப்புரம் தொகுதியில் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றாா். 2011, 2016-இல் தொடா்ச்சியாக தவனூா் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com