ஜி7 வெளியுறவு அமைச்சா்கள் மாநாடு: இந்தியாவுக்கு பிரிட்டன் அழைப்பு

ஜி7 வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இந்தியாவுக்கு பிரிட்டன் அரசு செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்துள்ளது.

லண்டன்: ஜி7 வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இந்தியாவுக்கு பிரிட்டன் அரசு செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஜி7 வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாடு, லண்டனில் வரும் மே மாதம் 3-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அமைச்சா்கள் நேரில் பங்கேற்கும் இந்த மாநாட்டில் கனடா, பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய 7 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்களும், ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனா்.

இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்குமாறு இந்தியா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்களுக்கும் ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகள்) அமைப்பின் பொதுச் செயலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் இந்தியா சாா்பில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்பாா் என்று தெரிகிறது.

முன்னதாக, இந்த மாநாட்டுக்கான திட்டத்தை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் டோமினிக் ராப் செவ்வாய்க்கிழமை உறுதிசெய்தாா். இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘இந்த மாநாடு, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு வாய்ப்புகளை உருவாக்கித் தரும். அதன் மூலம் கரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைப்பதை உறுதிசெய்வது, கரோனாவில் இருந்து விரைவில் உலக நாடுகள் மீண்டு வருவது, ஏழ்மையான நாடுகளில் பெண்களுக்கு தரமான கல்வி கிடைக்கச் செய்வது, பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதில் குறிக்கோளுடன் செயல்படுவது உள்ளிட்ட இலக்குகளை அடைவதற்கு உறுப்பு நாடுகள் திட்டமிட வழிவகுக்கும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com