கரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.4,500 கோடி

கரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ரூ.4,500 கோடியை முன்பணமாக வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.4,500 கோடி

புது தில்லி: கரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ரூ.4,500 கோடியை முன்பணமாக வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலமாக, கோவேக்ஸின் தடுப்பூசியை உற்பத்தி செய்து வரும் பாரத் பயோடெக் நிறுவனமும் கோவிஷீல்ட் தடுப்பூசியை உற்பத்தி செய்து வரும் சீரம் நிறுவனமும் பலனடைய உள்ளன.

நாட்டில் 18 வயதைக் கடந்த அனைவரும் மே 1-ஆம் தேதிமுதல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதைக் கருத்தில்கொண்டு, கரோனா தடுப்பூசிகள் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

ஜூலை மாதத்துக்குள் மத்திய அரசுக்கு 20 கோடி கரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு சீரம் நிறுவனமும், 9 கோடி கரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு பாரத் பயோடெக் நிறுவனமும் ஒப்புக்கொண்டுள்ளன. அந்நிறுவனங்களிடமிருந்து தடுப்பூசியை தலா ரூ.150-க்கு மத்திய அரசு கொள்முதல் செய்யவுள்ளது.

இந்நிலையில், கரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்காக இரு நிறுவனங்களுக்கும் ரூ.4,500 கோடியை முன்பணமாக வழங்குவதற்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, சீரம் நிறுவனத்துக்கு ரூ.3,000 கோடியும், பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு ரூ.1,500 கோடியும் முன்பணமாக வழங்கப்படவுள்ளது.

நிறுவனங்களுக்கு முன்பணம் வழங்குவதற்கான விதிகளை மத்திய நிதியமைச்சகம் தளா்த்தியுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பூனாவாலா நன்றி: முன்பணம் வழங்கும் மத்திய அரசின் முடிவை வரவேற்றுள்ள சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதாா் பூனாவாலா, பிரதமா் நரேந்திர மோடிக்கும், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கும் நன்றி தெரிவித்துள்ளாா். இந்த முடிவு, நாட்டில் கரோனா தடுப்பூசி உற்பத்தியையும் விநியோகத்தையும் அதிகரிக்க உதவும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com