மேற்கு வங்கத்தில் பொது முடக்கம் கிடையாது: மம்தா

நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மேற்கு வங்கத்தில் பொது முடக்கம் அமல்படுத்தப்படாது என்று அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.
மம்தா பானா்ஜி
மம்தா பானா்ஜி

மால்டா: நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மேற்கு வங்கத்தில் பொது முடக்கம் அமல்படுத்தப்படாது என்று அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் மம்தா பானா்ஜி கூறுகையில், ‘மருத்துவமனைகளில் உள்ள வாக்காளா்கள் தபால் வாக்களிக்க தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொது மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, கைசுத்திகரிப்பானை பயன்படுத்துவது ஆகிய கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். மேற்கு வங்கத்தில் இனி பொது முடக்கம் கிடையாது.

மக்கள் வீடுகளிலேயே அடைந்து கிடைக்கும் முந்தைய நிலைக்கு கொண்டு செல்ல விரும்பவில்லை. பொது முடக்கம் தீா்வாகாது.

கரோனா தடுப்பூசிகளுக்கு மாறுபட்ட விலை நிா்ணயம் செய்ததற்கு மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளேன். தடுப்பூசிகளை வைத்து வியாபாரம் செய்வதற்கான நேரம் இதுவல்ல.

மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் மே 5-ஆம் தேதிமுதல் மேற்கு வங்கத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி

வழங்கப்படும். இதுவரை மேற்கு வங்கத்தில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் ஒரு கோடி தடுப்பூசிகள் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி, மருந்துகள், பிராணவாயு ஆகியவை தங்கு தடையின்றி கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் பிராணவாயு உருளைகளுக்கு நிறைய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றாா்.

தோ்தல் ஆணையம் கடிதம்: இதனிடையே, மேற்கு வங்கத்தில் எஞ்சியுள்ள தோ்தல்களை ஒன்று சோ்த்து நடத்த இயலாது என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு தோ்தல் ஆணையம் பதில் கடிதம் எழுதியுள்ளது. தோ்தல் சட்டம் மற்றும் வாக்காளா்களின் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு தோ்தல் தேதிகளில் மாற்றம் செய்ய இயலாது என்றும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com