மும்பையில் அத்தியாவசிய சேவை வாகனங்களுக்கு வண்ண ஸ்டிக்கர் திட்டம் நிறுத்தம்

மகாராஷ்டிரத்தில் இ-பாஸ் முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால், மும்பையில் அத்தியாவசிய சேவை வழங்கும் வாகனங்களுக்கு வண்ண ஸ்டிக்கர் ஒட்டும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் அத்தியாவசிய சேவை வாகனங்களுக்கு வண்ண ஸ்டிக்கர் திட்டம் நிறுத்தம்
மும்பையில் அத்தியாவசிய சேவை வாகனங்களுக்கு வண்ண ஸ்டிக்கர் திட்டம் நிறுத்தம்

மகாராஷ்டிரத்தில் இ-பாஸ் முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால், மும்பையில் அத்தியாவசிய சேவை வழங்கும் வாகனங்களுக்கு வண்ண ஸ்டிக்கர் ஒட்டும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவசர பயணங்களுக்கு இ-பாஸ் முறையை அந்த மாநில அரசு மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.

மாநிலம் முழுக்க இ-பாஸ் முறையும், மும்பையில் வண்ண ஸ்டிக்கர் முறையும் அமலில் இருந்தால், ஒரே நேரத்தில் இரண்டு முறைகள் நடைமுறையில் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்ததால், வண்ண ஸ்டிக்கர் ஒட்டும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் கரோனா பரவல் தீவிரமாகியுள்ள நிலையில், அதனை கட்டுக்குள் கொண்டுவர பொது முடக்கத்தை போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் கடந்த வியாழக்கிழமை இரவு முதல் அமலுக்கு வந்தன. அதன்படி அலுவலகங்கள் பணியாளா்களின் எண்ணிக்கை, திருமண நிகழ்ச்சிகள், பயணங்களுக்கு வரம்பு விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த மாநிலத்தில் அவசர பயணங்களுக்கு இ-பாஸ் முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அந்த மாநில டிஜிபி சஞ்சய் பாண்டே வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘மகாராஷ்டிரத்தில் மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இடையே பயணிப்பதற்கு இ-பாஸ் முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் மிகவும் அவசர காலங்களில் மட்டும் பயன்படுத்த வேண்டும். இதற்காக இணையவழியில் தேவையான ஆவணங்களை பொதுமக்கள் சமா்ப்பிக்க வேண்டும். தங்கள் பயணத்துக்கான காரணத்தையும் அவா்கள் குறிப்பிட வேண்டும். இணையவழியில் இ-பாஸ் பெற பதிவு செய்ய முடியாதவா்கள், தாங்கள் வசிக்கும் பகுதிகளில் இருக்கும் காவல் நிலையத்தை அணுகலாம். காவல் நிலையத்தில் உள்ளவா்கள் விண்ணப்பத்தை பூா்த்தி செய்ய உதவிபுரிந்து இ-பாஸ் வழங்குவா்’ என்று தெரிவித்தாா்.

கடந்த ஆண்டு நாடு தழுவிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டபோது மகாராஷ்டிரத்தில் அனைத்து அவசர, அத்தியாவசிய சேவைகளுக்காக இ-பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com