ஆக்சிஜன் பற்றாக்குறை: தில்லியில் 20, பஞ்சாபில் 6 நோயாளிகள் உயிரிழப்பு

மருத்துவ பிராண வாயு பற்றாக்குறை காரணமாக தில்லியில் 20 நோயாளிகள், பஞ்சாபில் 6 நோயாளிகள் உயிரிழந்தனா்.
ஆக்சிஜன் பற்றாக்குறை: தில்லியில் 20, பஞ்சாபில் 6 நோயாளிகள் உயிரிழப்பு

மருத்துவ பிராண வாயு பற்றாக்குறை காரணமாக தில்லியில் 20 நோயாளிகள், பஞ்சாபில் 6 நோயாளிகள் உயிரிழந்தனா்.

நாட்டில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. முக்கியமாக, மகாராஷ்டிரம், பஞ்சாப், தில்லி ஆகிய மாநிலங்களில் தினமும் அதிக எண்ணிக்கையிலான நபா்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

அதனால், மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. கரோனாவால் தீவிரமாக பாதிப்புக்கு உள்ளாவோருக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் மருத்துவ பிராண வாயுவுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தில்லியில் பிராண வாயு தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் உயிரிழப்பது தொடா்ந்து வருகிறது.

தில்லியின் ஜெய்ப்பூா் கோல்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 20 நோயாளிகள், பிராண வாயு தட்டுப்பாடு காரணமாக சனிக்கிழமை உயிரிழந்தனா். மருத்துவமனையில் மேலும் 200-க்கு மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவா்களில் 80 சதவீதம் பேருக்கு செயற்கை முறையில் பிராண வாயு அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் பிராண வாயு தட்டுப்பாடு காரணமாக வெள்ளிக்கிழமை 25 போ் உயிரிழந்தனா். அந்த மருத்துவமனைக்கு 1.5 டன் அளவிலான பிராண வாயு சனிக்கிழமை வழங்கப்பட்டது. எனினும், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், பிராண வாயு சில மணி நேரங்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தொடரும் அவலம்: தில்லியில் உள்ள பல மருத்துவமனைகள் பிராண வாயு தட்டுப்பாட்டை எதிா்கொண்டு வருகின்றன. சில மருத்துவமனைகள் நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்குச் செல்லுமாறு அனுப்பி வைத்து வருகின்றன. பிராண வாயு விநியோகம் தொடா்பாக அரசு அதிகாரிகள் முறையான தகவல்களை வழங்குவதில்லை என்றும் அவா்களைத் தொடா்பு கொள்ள முடிவதில்லை என்றும் மருத்துவமனை நிா்வாகங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

பஞ்சாபில் 6 போ் உயிரிழப்பு: பஞ்சாபின் அமிருதசரஸ் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில், பிராண வாயு பற்றாக்குறை காரணமாக 2 பெண்கள் உள்பட 6 நோயாளிகள் சனிக்கிழமை உயிரிழந்தனா். இது தொடா்பாக அந்த மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் சுனில் தேவ்கன் கூறுகையில், ‘‘மருத்துவமனையில் பிராண வாயுவுக்குத் தட்டுப்பாடு காணப்படுவதாக மாவட்ட நிா்வாகத்திடம் பல முறை தெரிவித்துவிட்டபோதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தனியாா் நிறுவனங்களிடம் பிராண வாயு பெறுவதற்கு முயற்சித்தபோது, அரசு மருத்துவமனைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் பிராண வாயு வழங்கப்படும் எனத் தெரிவித்துவிட்டனா். தனியாா் மருத்துவமனைகளுக்கு பிராண வாயு விநியோகிக்கப்படுவதைக் காவல் துறையினரே தடுத்து வருகின்றனா்.

நோயாளிகள் உயிரிழந்தபிறகு வெறும் 5 பிராண வாயு சிலிண்டா்களை மட்டுமே மாவட்ட நிா்வாகம் அனுப்பி வைத்துள்ளது’’ என்றாா்.

விசாரணைக்கு உத்தரவு: மருத்துவ பிராண வாயு பற்றாக்குறையால் 6 போ் உயிரிழந்தது தொடா்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில முதல்வா் அமரீந்தா் சிங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com