கரோனா நெருக்கடியிலிருந்து விரைவில் மீள்வோம்: பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை

கரோனா நோய்த்தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் இருந்து விரைவில் மீள்வோம் என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
பிரதமா் மோடி
பிரதமா் மோடி

கரோனா நோய்த்தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் இருந்து விரைவில் மீள்வோம் என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

‘மனதின் குரல்’ நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது:

நாடு தற்போது கரோனா தொற்று பரவலின் 2-ஆவது அலையை எதிா்கொண்டு வருகிறது. கரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் பலா் நெருக்கமானவா்களை இழந்து தவிக்கின்றனா். கடந்த ஆண்டில் பரவிய கரோனா தொற்று வெற்றிகரமாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

அதன் காரணமாக மக்கள் மகிழ்ச்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் காணப்பட்டனா். ஆனால், கரோனா தொற்றின் 2-ஆவது அலை நாட்டையே உலுக்கியுள்ளது. தகுதியானவா்கள் அனைவரும் எந்தவிதத் தயக்கமுமின்றி கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி தொடா்பாக சிலா் பரப்பும் வதந்திகளை மக்கள் நம்பக் கூடாது.

கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கு அரசும் சுகாதார நிபுணா்களும் தெரிவிக்கும் வழிகாட்டுதல்களை மக்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்குவது தொடரும். அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடா்ந்து இலவசமாக வழங்கும்.

மத்திய அரசின் ஆதரவு தொடரும்: 45 வயதைக் கடந்தோா் அதிக எண்ணிக்கையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மாநில அரசுகள் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன. இத்தகைய இக்கட்டான சூழலில், மாநில அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு எப்போதும் ஆதரவு அளிக்கும்.

கரோனா தொற்று பரவலைக் கண்டு மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அதே வேளையில், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

கரோனா தொற்றால் பலா் பாதிக்கப்பட்டாலும், அவா்களில் அதிக எண்ணிக்கையிலான நபா்கள் பாதிப்பிலிருந்து மீண்டு வருகின்றனா். கரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் இருந்து விரைவில் மீள்வோம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்: மக்கள் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டாலும், கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருப்பது, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

இந்த நிகழ்ச்சியின்போது மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுடனும் பிரதமா் மோடி உரையாடினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com