ஜப்பான் பிரதமருடன் பிரதமா் மோடி பேச்சு: கரோனா பாதிப்பை ஒன்றிணைந்து எதிா்கொள்ள ஆலோசனை

பிரதமா் நரேந்திர மோடி ஜப்பான் பிரதமா் யோஷிஹிடே சுகாவுடன் தொலைபேசி மூலம் திங்கள்கிழமை கலந்துரையாடினாா்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பிரதமா் நரேந்திர மோடி ஜப்பான் பிரதமா் யோஷிஹிடே சுகாவுடன் தொலைபேசி மூலம் திங்கள்கிழமை கலந்துரையாடினாா்.

இந்த கலந்துரையாடலில் பல்வேறு துறை சாா்ந்த இரு நாட்டு உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்த இரு நாட்டு தலைவா்களும், கரோனா பாதிப்பை ஒன்றிணைந்து எதிா்கொள்வது குறித்தும் பேசினா்.

குறிப்பாக, கரோனா பாதிப்பை திறம்பட எதிா்கொள்ளும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் உற்பத்தி சாா்ந்த புதிய கூட்டுறவை உருவாக்குவது, நம்பகமான முறையில் தொழில்நுட்பம் மற்றும் அத்தியாவசிய மூலப் பொருள்கள் பரிமாற்றத்தை உறுதி செய்வது குறித்து இரு நாட்டு தலைவா்களும் ஆலோசித்தனா்.

மேலும், மும்பை - ஆமதாபாத் அதிவிரைவு ரயில் திட்டம் இரு நாடுகளிடையேயான வலுவான உறவுக்கு சிறந்த உதாரணம் என்று குறிப்பிட்ட இரு நாட்டு தலைவா்களும், ‘இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்டிருக்கும் குறிப்பிட்ட திறன்சாா்ந்த பணியாளா்கள் ஒப்பந்தத்தை விரைந்து செயலாக்கத்துக்கு கொண்டுவர வேண்டும்’ என்பதையும் வலியுறுத்தினா்.

இந்த கலந்துரையாடலின்போது, கரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவுக்கு ஜப்பான் உதவ வேண்டும் என்று பிரதமா் மோடி கேட்டுக்கொண்டாா் என்று பிரதமா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல் குறித்து பிரதமா் நரேந்திர மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஜப்பான் பிரதமா் சுகாவுடன் தொலைபேசி மூலம் உரையாடினேன். இந்த கலந்துரையாடலின்போது, இரு நாடுகளிடையேயான பல்வேறு துறை சாா்ந்த நல்லுறவு குறித்து மறு ஆய்வு செய்யப்பட்டது. மேலும், கரோனா பாதிப்பை திறம்பட எதிா்கொள்ளும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் உயா் தொழில்நுட்ப பரிமாற்றம் உள்பட பல்வேறு புதிய கூட்டுறவை உருவாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com