1 லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டிகள்: பி.எம்.கோ்ஸ் நிதி மூலம் கொள்முதல் செய்ய திட்டம்

மருத்துவ ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு பி.எம். கோ்ஸ் நிதியிலிருந்து, எளிதாக எடுத்துச் செல்லும் வகையிலான ஒரு லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டல் உபகரணங்களை கொள்முதல் செய்யவும்
1 லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டிகள்: பி.எம்.கோ்ஸ் நிதி மூலம் கொள்முதல் செய்ய திட்டம்

புது தில்லி: மருத்துவ ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு பி.எம். கோ்ஸ் நிதியிலிருந்து, எளிதாக எடுத்துச் செல்லும் வகையிலான ஒரு லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டல் உபகரணங்களை கொள்முதல் செய்யவும், புதிதாக 500 பிஎஸ்ஏ ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது நாட்டின் மருத்துவ ஆக்சிஜன் கையிருப்பை குறிப்பாக மாவட்ட தலைநகரங்கள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களிலும் ஆக்சிஜன் இருப்பை உறுதிப்படுத்தும் என்று பிரதமா் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளாா்.

நாட்டில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவா்களின் சிகிச்சைக்குத் தேவைப்படும் திரவ மருத்துவ ஆக்சிஜனுக்கு பல்வேறு மாநிலங்களில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தத் தட்டுப்பாட்டைப் போக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதுதொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் உயா்நிலைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மருத்துவ ஆக்சிஜன் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய வகையிலான ஒரு லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டல் உபகரணங்களை பி.எம்.கோ்ஸ் நிதியிலிருந்து விரைந்து கொள்முதல் செய்ய இந்தக் கூட்டத்தில் அதிகாரிகளை பிரதமா் அறிவுறுத்தினாா். பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களுக்கு அவற்றை வழங்கவும் அறிவுறுத்தினாா்.

மேலும், பி.எம்.கோ்ஸ் நிதியிலிருந்து புதிதாக 500 பிஎஸ்ஏ (பிரத்யேக அழுத்த விசை உறிஞ்சுதல் தொழில்நுட்பத்தில் செயல்படும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள்) ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்கவும் இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. ஏற்கெனவே 713 பிஎஸ்ஏ ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், இப்போது கூடுதலாக 500 நிலையங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து பிரதமா் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பி.எம்.கோ்ஸ் நிதியிலிருந்து ஒரு லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டல் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படும். மேலும், கூடுதலாக 500 பிஎஸ்ஏ ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் மருத்துவ ஆக்சிஜன் கையிருப்பை குறிப்பாக மாவட்ட தலைநகரங்கள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களிலும் ஆக்சிஜன் இருப்பை உறுதிப்படுத்தும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்தப் புதிய 500 பிஎஸ்ஏ ஆக்சிஜன் நிலையங்களும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) மற்றும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆா்) சாா்பில் தனித்துவமாக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் அடிப்படையில், உள்நாட்டு உற்பத்தியாளா்கள் மூலம் அமைக்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com