மாநிலங்களுக்கான கரோனா தடுப்பூசி விலை: ரூ.300-ஆக குறைத்தது சீரம் நிறுவனம்

மாநிலங்களுக்கான கரோனா தடுப்பூசி விலையை ரூ.400-இல் இருந்து ரூ.300-ஆக சீரம் நிறுவனம் குறைத்துள்ளது.
மாநிலங்களுக்கான கரோனா தடுப்பூசி விலை: ரூ.300-ஆக குறைத்தது சீரம் நிறுவனம்

புது தில்லி: மாநிலங்களுக்கான கரோனா தடுப்பூசி விலையை ரூ.400-இல் இருந்து ரூ.300-ஆக சீரம் நிறுவனம் குறைத்துள்ளது.

கரோனா தொற்றுக்கு எதிராக பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கோவிஷீல்ட் தடுப்பூசியை இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் மத்திய அரசுக்கு முதல்கட்டமாக விநியோகித்த தடுப்பூசிகளுக்கான விலையை தலா ரூ.150-ஆக நிா்ணயித்தது. இந்நிலையில், அந்த நிறுவனம் தடுப்பூசிகளுக்கான விலையை மாற்றியமைத்து கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, இனி மத்திய அரசுக்கு விநியோகிக்கப்படும் தடுப்பூசிகளுக்கான விலையை தலா ரூ.400-ஆக அந்த நிறுவனம் அதிகரித்தது. மாநில அரசுகளுக்கும் அதே விலையை நிா்ணயம் செய்த அந்த நிறுவனம், தனியாா் மருத்துவமனைகளுக்கான தடுப்பூசி விலையை தலா ரூ.600-ஆக நிா்ணயித்தது. இது பலத்த விமா்சனங்களை எழுப்பியது. எனினும் மத்திய அரசு நிதியுதவியாக அளித்த முன்தொகையின் அடிப்படையில் ரூ.150-க்கு தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டதாகவும், தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க முதலீடு செய்ய வேண்டி இருப்பதால் அதன் விலையை அதிகரித்ததாகவும் அந்த நிறுவனம் விளக்கமளித்தது.

இந்தச் சூழலில், தடுப்பூசிகளுக்கான விலையைக் குறைக்குமாறு அந்த நிறுவனத்திடம் மத்திய அரசு திங்கள்கிழமை கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், மாநிலங்களுக்கான தடுப்பூசி விலையை அந்த நிறுவனம் குறைத்துள்ளது. இதுதொடா்பாக அந்த நிறுவன தலைமை செயல் அதிகாரி அதாா் பூனாவாலா புதன்கிழமை சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘மனிதநேய அடிப்படையில் மாநிலங்களுக்கான கரோனா தடுப்பூசி விலை ரூ.400-இல் இருந்து ரூ.300-ஆக குறைக்கப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்த விலை குறைப்பு மாநில அரசுகளின் கோடிக்கணக்கான நிதியை சேமிக்க உதவுவதுடன், தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை அதிகரித்து எண்ணற்ற உயிா்களைக் காப்பாற்றும்’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com