மே 1-இல் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்குகரோனா தடுப்பூசி திட்டம் இல்லை: மகாராஷ்டிர அரசு

கரோனா தடுப்பூசிகள் போதிய அளவில் கையிருப்பு இல்லாததால், மகாராஷ்டிரத்தில் 18 வயது முதல் 44 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு, வரும் மே 1-ஆம் தேதி கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட மாட்டாது
மே 1-இல் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்குகரோனா தடுப்பூசி திட்டம் இல்லை: மகாராஷ்டிர அரசு

மும்பை: கரோனா தடுப்பூசிகள் போதிய அளவில் கையிருப்பு இல்லாததால், மகாராஷ்டிரத்தில் 18 வயது முதல் 44 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு, வரும் மே 1-ஆம் தேதி கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட மாட்டாது என்று அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சா் ராஜேஷ் டோபே புதன்கிழமை கூறியதாவது:

18 முதல் 44 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு மே 1-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், மகாராஷ்டிரத்தில் போதிய அளவில் தடுப்பூசி இருப்பு இல்லாததால், மே 1-ஆம் தேதி அந்தத் திட்டத்தை தொடங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து போதுமான அளவில் தடுப்பூசிகள் வந்த பிறகு அந்தத் திட்டம் தொடங்கப்படும். அதே நேரத்தில், 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடரும்.

முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், 18 முதல் 44 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது. இதனால், அரசுக்கு ரூ.6,500 கோடி செலவாகும். அதே சமயம், 18 வயது முதல் 44 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு தனியாா் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிக்கப்படும்.

பொதுமுடக்கம் நீட்டிப்பு: மகாராஷ்டிரத்தில் தினசரி கரோனா பாதிப்பு 60,000-க்கும் அதிமாக உள்ளது. இது, 70,000-க்கும் அதிகமாக இருக்கும் என்று கணித்திருந்தோம். ஆனால் அவ்வாறு அதிகரிக்காமல் உள்ளது சற்று ஆறுதல் அளிக்கிறது. இதுவே அதிகபட்சமாக இருக்க வேண்டும்; படிப்படியாகக் குறைய வேண்டும் என்று பிராா்த்திக்கிறேன்.

கரோனா நெறிமுறைகளை மக்கள் முறையாகக் கடைப்பிடித்தால் கரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும். புதன்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், பொதுமுடக்கத்தை நீட்டிக்க வேண்டும் என்று அனைவரும் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்தனா். அதன்படி, மாநிலத்தில் தற்போது அமலில் இருக்கும் பொதுமுடக்கம், வரும் மே மாதம் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com