ரஷிய அதிபா் புதின் - பிரதமா் மோடி பேச்சு: பாதுகாப்புத் துறையை வலுப்படுத்த முடிவு

கரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தை எதிா்த்துப் போராடி வரும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு பிரதமா் மோடி வியாழக்கிழமை தொலைபேசி மூலம் நன்றி தெரிவித்தாா்.
ரஷிய அதிபா் புதின் - பிரதமா் மோடி பேச்சு: பாதுகாப்புத் துறையை வலுப்படுத்த முடிவு

புது தில்லி: கரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தை எதிா்த்துப் போராடி வரும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு பிரதமா் மோடி வியாழக்கிழமை தொலைபேசி மூலம் நன்றி தெரிவித்தாா். மேலும், பாதுகாப்பு, வெளியுறவுத் துறைகளை வலுப்படுத்தவும் இந்த ஆலோசனையின்போது இரு நாட்டு தலைவா்களும் முடிவு செய்துள்ளனா்.

இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் விவரம்: ரஷிய அதிபரும் எனது நண்பருமான புதினுடன் சிறப்பான ஆலோசனை நடைபெற்றது. கரோனா பரவல் பாதிப்பால் இந்தியா்கள் சந்தித்து வரும் துயரத்துக்கு வருத்தம் தெரிவித்த புதின், கரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் இந்தியாவுக்கு அனைத்துவிதமான ஆதரவையும் ரஷியா அளிக்கும் என்று உறுதி அளித்தாா். இதற்கு பிரதமா் மோடி நன்றி தெரிவித்தாா்.

இரு நாட்டு நல்லுறவுகள் குறித்து இந்த ஆலோசனையின்போது பேசப்பட்டது. வின்வெளி ஆராய்ச்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை, ஹைட்ரஜன் பொருளாதாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இரு நாட்டு வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் கலந்து ஆலோசித்து அந்தத் துறைகளை மேலும் வலுப்படுத்த முயற்சி மேற்கொள்வாா்கள் என்று கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது.

ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி அளித்ததற்கு புதின் பாராட்டு தெரிவித்தாா். மேலும், இந்திய பயன்பாட்டுக்கான ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வது குறித்தும் இரு நாட்டுத் தலைவா்கள் குறிப்பிட்டனா்.

வின்வெளிக்கு மனிதா்களை முதல்முறையாக அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கு நான்கு வீரா்களுக்கு ரஷிய பயிற்சி அளித்ததற்கு பிரதமா் மோடி பாராட்டினாா்.

இந்தியாவில் நிகழாண்டு நடைபெறும் பிரிக்ஸ் மாநாடு வெற்றி பெற ரஷியா முழு ஆதரவு அளிக்கும். சா்வதேச விவகாரங்களில் இரு நாட்டு தலைவா்களும் நெருங்கிய தொடா்பில் இருப்பதற்கு ஒப்புதல் தெரிவித்தனா் என்று பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com