மாநிலங்களிடம் ஒரு கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் இருப்பு: மத்திய அரசு

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் ஒரு கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் ஒரு கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 3 நாள்களில் மாநிலங்களுக்கு மேலும் 57 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

மகாராஷ்டிரம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இந்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 15.95 கோடி (15,95,96,140) கரோனா தடுப்பூசிகள் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில், 14.89 கோடி (14,89,76,248) தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 1.06 கோடி (1,06,19,892) தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் உள்ளன. இன்னும் 3 நாள்களில் மாநிலங்களுக்கு மேலும் 57 லட்சம் (57,70,000) தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட இருக்கின்றன.

புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, இதுவரை மகாராஷ்டிரத்துக்கு 1.58 கோடி தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு, அவற்றில் 1.53 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாநில அரசிடம் இன்னும் 5,06,319 தடுப்பூசிகள் கைவசம் உள்ளன. இன்னும் 3 நாள்களில் அந்த மாநிலத்துக்கு மேலும் 5 லட்சம் கரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும்.

தில்லிக்கு 36.90 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டதில், 32.43 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 4.47 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பாக உள்ளன. 1.5 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 1.36 கோடி தடுப்பூசிகளில் 1.32 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 3.92 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பாக உள்ளன. அந்த மாநிலத்துக்கு 2 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

மேற்கு வங்கத்துக்கு 1.09 கோடி தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில், 1.06 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு, 2.92 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பாக உள்ளன. அந்த மாநிலத்துக்கு மேலும் 4 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. முதலில் சுகாதாரத் துறையினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னா், முன்களப் பணியாளா்கள், முதியவா்கள் என படிப்படியாக இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. வரும் 1-ஆம் தேதிமுதல் 18 வயதுக்கும் மேற்பட்டவா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதையொட்டி, மாநிலங்களில் கரோனா தடுப்பூசியின் இருப்பு விவரம், அனுப்பி வைக்கப்படவுள்ள தடுப்பூசிகள் பற்றிய விவரங்களை சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com