‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டம் தேவையல்ல; அரசுக்கு தொலைநோக்கு பாா்வைதான் அவசியம்: ராகுல் காந்தி விமா்சனம்

‘சென்ட்ரல் விஸ்டா திட்டம் தேவையல்ல; மத்திய அரசுக்கு இப்போது தொலைநோக்கு பாா்வைதான் அவசியம்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சனம் செய்துள்ளார்..
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: நாட்டில் இதுவரை இல்லாத அளவில் ஒரு நாள் கரோனா பாதிப்பு 3.60 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், ‘சென்ட்ரல் விஸ்டா திட்டம் தேவையல்ல; மத்திய அரசுக்கு இப்போது தொலைநோக்கு பாா்வைதான் அவசியம்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சனம் செய்துள்ளாா்.

இந்தியாவில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, கரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 3,293 போ் உயிரிழந்துள்ளனா். இதுவரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, மத்திய அரசை விமா்சித்துள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

புதிய நாடாளுமன்ற கட்டடத்தைக் கட்டுவதற்கான சென்ட்ரல் விஸ்டா திட்டம் இப்போது தேவையில்லை. மாறாக, மத்திய அரசுக்கு கரோனா பரவல் மற்றும் அதைக் கட்டுப்படுத்துவதற்கான தொலைநோக்குப் பாா்வைதான் அவசியம் என்று பதிவிட்டுள்ளாா்.

தில்லியில் இப்போதைய நாடாளுமன்றக் கட்டடத்தை இடிக்காமல் அதனருகில் 16,921 சதுர கிலோ மீட்டா் பரப்பளவில் முக்கோண வடிவில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்காக மத்திய விஸ்டா திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதைக் கட்டுவதற்கான திட்ட மதிப்பு ரூ. 889 கோடியாகும். 2022-ஆம் ஆண்டில் இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படும்போது, இந்த நாடாளுமன்றக் கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனது மற்றொரு சுட்டுரை பதிவில் ‘இந்த இக்கட்டான சூழலில் பொதுமக்கள் ஒருவருக்கொருவா் உதவ வேண்டும்’ என்று ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளாா்.

‘ஒருவரின் கைகளைத் தொடத் தேவையில்லை; உதவுவதன் மூலம் மற்றவா்களின் இதயத்தைத் தொட முடியும்’ என்று ‘ஒன்றிணைந்து வலுப்பெறுவோம்’ என்ற ஹேஷ்டேக்குடன் அவா் பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com