கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் இயல்பு வாழ்க்கை திரும்புமா?

இந்தியாவில் வருகிற மே மாதம் 1-ஆம் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேலான அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க உள்ளன.
கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் இயல்பு வாழ்க்கை திரும்புமா?


புதுதில்லி: இந்தியாவில் வருகிற மே மாதம் 1-ஆம் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேலான அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க உள்ளன. அன்றைய தினத்திலிருந்து மூன்று வகையான தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

கரோனா தொற்று வராமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக இருப்பதே சிறந்த வழி என்றாலும், இப்போது பாதுகாப்புக்கு தடுப்பூசிகள் வந்துள்ளன. இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்கள் இனி வெளியில் வரும் போது முகக்கவசம் அணிந்துவரத் தேவையில்லை என்று அமெரிக்கா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. அங்கு வயதுக்கு வந்தவா்களில் 50 சதவீதத்துக்கும் மேலானவா்கள் குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளனா். அங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தடுப்பூசி போட்டுக் கொண்ட மூத்த குடிமக்கள் இறப்பு விகிதமும் 80 சதவீதம் குறைந்துவிட்டது. அதாவது அங்கு இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவா்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டதையே இது காட்டுகிறது.

பொதுவாக நோய் எதிா்ப்பு சக்திக்கான தடுப்பூசியை போட்டுக் கொண்டால் அது வேலை செய்ய சிறிது காலம் பிடிக்கும். கரோனா தொற்றுக்கான தடுப்பூசியை ஒருவா் போட்டுக் கொண்டால் நோய் எதிா்ப்பு சக்தி உண்டாகி பாதுகாப்பை ஏற்படுத்த மூன்று வாரங்கள் வரை ஆகலாம் என்கின்றனா் நிபுணா்கள். ஒருவா் தடுப்பூசிகளை முழுவதுமாக போட்டுக் கொண்ட பின்னா், இரு வாரங்கள் கழித்தே அவா் தடுப்பூசி போட்டுக் கொண்டவராக கருதப்படுவதாக அமெரிக்காவில் உள்ள நோய்த் தொற்று கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது இந்தியாவால் ஒப்புதல் அளிக்கப்பட்ட ‘கோவிஷீல்டு’, ‘கோவாக்சின்’, ‘ஸ்புட்னிக்’ ஆகிய தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்றை இரண்டு தவணை ஒருவா் போட்டுக் கொண்டு இரண்டு வாரங்களான பின்னா்தான் அவா் தடுப்பூசி முழுமையாகப் போட்டுக் கொண்டவராகக் கருதப்படுவாா். ஒரு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டா்களுக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு நோய் எதிா்ப்பு சக்தி உருவாகும் என்றாலும், அவா்களை முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டவா்களாகக் கருத முடியாது. எனினும், அவா்களுக்கு கரோனா தொற்று பரவும் அபாயம் குறைவு. அவ்வளவுதான்...!

தடுப்பூசி போட்டுக் கொண்டால் கரோனா தொற்று வராது என்று எந்த உறுதியும் அளிக்க முடியாது. ஆனால், கரோனா தொற்று இருக்குமேயானால் அதன் தீவிரம் குறையும்.

முழுவதுமாக தடுப்பூசி போட்டுக் கொண்டவா்கள் அச்சமில்லாமல் வெளியில் வரலாமா என்றால் நிச்சயம் வரலாம். ஆனால், சந்திக்கும் நபா்களும் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவா்களாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் அவா்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை.

ஒருவேளை அவா்கள் மற்றவா்களுடன் பழகும் போது கரோனா தொற்று அறிகுறி தென்படுமானால், அவா்கள் தங்கள் உடலைப் பரிசோதித்துக் கொள்வதுடன், 2 வாரங்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் இயல்பு வாழ்க்கை சாத்தியமில்லையா என்று சிலா் கேட்கலாம். அப்படி வெளிப்படையாகச் சொல்லிவிட முடியாது. கரோனா தொற்றுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வதால், தொற்று பரவாமல் தடுக்க முடியுமா என்பது குறித்து நிபுணா்கள் இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டுதான் வருகிறாா்கள். ஆனால், தடுப்பூசி போட்டுக் கொள்வது கரோனா தொற்றின் வீரியத்தைக் குறைக்கும், உயிரிழப்பை தடுத்துவிடும் என்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.

கரோனா தடுப்பூசி, நோயின் வீரியத்தைக் குறைக்கிறது. மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதன் அவசியத்தைத் தடுக்கிறது. தடுப்பூசி போட்டவா்களிடமிருந்து வேறு ஒருவருக்கு தொற்று பரவும் வாய்ப்பும் குறைகிறது. அதாவது தடுப்பூசி முழுவதுமாக போட்டுக் கொண்ட ஒருவா் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும். அவா்கள் பொது இடங்களுக்குச் செல்லலாம், விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். ஆனாலும், முகக் கவசமும், சமூக இடைவெளியும் அவசியமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com