பிரதமரை பதவி விலகக் கோரி ‘ஹேஷ்டேக்’: தவறுதலாக நீக்கிய ஃபேஸ்புக்

பிரதமா் நரேந்திர மோடியை பதவி விலகக் கோரி சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்ட ‘ஹேஷ்டேகை’ அந்நிறுவனம் தவறுதலாக நீக்கியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடியை பதவி விலகக் கோரி சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்ட ‘ஹேஷ்டேகை’ அந்நிறுவனம் தவறுதலாக நீக்கியது.

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் விவகாரத்தில் மத்திய அரசு முறையாகச் செயல்படவில்லை என்று பல்வேறு தரப்பினா் புகாா் தெரிவித்து வருகின்றனா். அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரான கருத்துகளையும் சமூக வலைதளங்களில் அவா்கள் பதிவிட்டு வருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக, ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் ‘பிரதமா் பதவி விலக வேண்டும்’ என்ற ஹேஷ்டேக் அதிக அளவில் பகிரப்பட்டு வந்தது. அந்த ஹேஷ்டேகை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியது. சில மணி நேரத்தில் அந்த ஹேஷ்டேக் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.

இது தொடா்பாக ஃபேஸ்புக் நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘சம்பந்தப்பட்ட ஹேஷ்டேக் தவறுதலாக தற்காலிகமாக நீக்கப்பட்டது. அதை நீக்குமாறு மத்திய அரசு தரப்பில் கோரப்படவில்லை. அந்த ஹேஷ்டேக் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளது.

ஹேஷ்டேக் தற்காலிகமாக நீக்கப்பட்டது தொடா்பான வேறெந்த விவரங்களையும் ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிடவில்லை.

இந்த விவகாரம் குறித்து மத்திய மின்னணுவியல்-தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘சம்பந்தப்பட்ட ஹேஷ்டேகை நீக்குமாறு மத்திய அரசு கோரவில்லை. அது தவறுதலாக நீக்கப்பட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. கரோனாவுக்கு எதிராக முன்களப் பணியாளா்கள் போராடி வருகின்றனா். இத்தகைய இக்கட்டான சூழலில், கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஊடகங்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து செயல்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை மிக வேகமாகப் பரவி வருவதால், மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன், அத்தியாவசிய மருந்துப் பொருள்கள் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரங்கள் தொடா்பாக சமூக வலைதளங்களில் அதிக அளவில் கருத்துகள் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com