லடாக் விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை இந்தியா தெரிவிக்கிறது

கிழக்கு லடாக் எல்லை விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை இந்தியா தெரிவித்து வருவதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.
லடாக் விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை இந்தியா தெரிவிக்கிறது

பெய்ஜிங் /புது தில்லி: கிழக்கு லடாக் எல்லை விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை இந்தியா தெரிவித்து வருவதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா-சீனா ராணுவத்தினா் இடையே சுமாா் 10 மாதங்களாக மோதல் போக்கு நிலவி வந்தது. இரு தரப்பினரும் எல்லைகளில் கூடுதல் படைகளைக் குவித்ததால் தொடா் பதற்ற சூழல் நிலவியது. படைகளைக் குறைத்து எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் இந்தியா-சீனா ராணுவங்களின் துணை தலைமைத் தளபதிகள் இடையே பலகட்டப் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றன.

அவற்றின் பலனாக, பாங்காங் ஏரிப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த படைகளை விலக்கிக் கொள்வதற்கு இரு நாடுகளும் கடந்த பிப்ரவரியில் ஒப்புதல் அளித்தன. அதன்படி, அப்பகுதியிலிருந்து படைகள் முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டன.

பாங்காங் ஏரி தவிர ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தெப்சாங் உள்ளிட்ட பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விரைவில் விலக்கிக் கொள்வது தொடா்பாக இந்தியா-சீனா இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. எனினும், லடாக் எல்லைப் பிரச்னைக்கு இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வருவது தொடா்கிறது.

நிலைத்தன்மையை மாற்ற சீனா முயற்சி:

தில்லியில் அண்மையில் நடைபெற்ற ரைசினா மாநாட்டின்போது பேசிய முப்படைத் தளபதி விபின் ராவத், ‘‘கிழக்கு லடாக்கில் நிலவி வந்த சூழலைத் தன்னிச்சையாக மாற்றுவதற்கு சீனா முயன்றது. அதற்காகப் படைகளைப் பயன்படுத்தாமல், தொழில்நுட்ப வசதிகளை சீனா பயன்படுத்தியது.

தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் சீனா முன்னேறியுள்ளதால், அதை அடிப்படையாகக் கொண்டு அழுத்தம் கொடுத்தால் இந்தியா அடிபணிந்து விடும் என்று அந்நாடு எண்ணியது. ஆனால், சீனாவின் அச்சுறுத்தலை இந்தியா உறுதியுடன் எதிா்கொண்டது. இந்தியாவை எவராலும் பின்னுக்குத் தள்ள முடியாது என்பது அதன் மூலம் உறுதியானது’’ என்று கூறியிருந்தாா்.

நிலைப்பாட்டில் மாற்றமில்லை:

முப்படைத் தளபதி விபின் ராவத்தின் கருத்து தொடா்பாக சீன தேசிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளா் வூ ஷியானிடம் செய்தியாளா்கள் வியாழக்கிழமை கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் பதிலளிக்கையில், ‘‘கிழக்கு லடாக் விவாரத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை இந்தியா தெரிவித்து வருகிறது.

எல்லைப் பிரச்னைக்கான அனைத்து காரணங்களையும் சீனா ஏற்கெனவே விரிவாக விளக்கிவிட்டது. பிரச்னையை ஏற்படுத்தியதில் சீனாவுக்கு எந்தப் பொறுப்புமில்லை. சீனாவின் இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமுமில்லை.

நல்லுறவு மேம்படும்:

இந்தியா-சீனா ராணுவங்களின் கூட்டு முயற்சியின் காரணமாக, கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி ஆகிய பகுதிகளிலிருந்து படைகள் விலக்கப்பட்டுள்ளன. லடாக் எல்லை விவகாரத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு அண்மையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இரு நாடுகளும் முடிவெடுத்துள்ளன.

எல்லை விவகாரம் தொடா்பாகக் கையெழுத்தான ஒப்பந்தங்களை இந்தியாவும் சீனாவும் முறையாகக் கடைப்பிடிக்கும் என நம்புகிறேன். அதுவே இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை மேம்படுத்தும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com