
ரஷியாவிலிருந்து விமானத்தில் வியாழக்கிழமை வந்தடைந்த மருத்துவப் பொருள்கள்.
புது தில்லி: கரோனா தொற்றின் இரண்டாவது அலையில் சிக்கித் தவித்து வரும் இந்தியாவுக்கு உதவுவதற்காக 20 டன் மருத்துவ நிவாரணப் பொருள்களை ரஷியா அனுப்பி வைத்துள்ளது. அந்த நிவாரணப் பொருள்கள் வியாழக்கிழமை இந்தியா வந்தடைந்தது.
இதுகுறித்து ரஷியத் தூதா் நிகோலாய் குடாஷேவ் கூறியதாவது:
ரஷியாவில் இருந்து 2 அவசர விமானங்களில் 20 டன் மருத்துவ நிவாரணப் பொருள்கள் இந்தியா வந்தடைந்துள்ளன. ஆக்சிஜன் செறிவூட்டிகள், செயற்கை சுவாசக் கருவிகள், அத்தியாவசிய மருந்துகள் ஆகியவை அவற்றில் அடங்கும்.
ரஷியாவில் இருந்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள், மே மாதத்தில் இந்தியாவுக்கு வரும். இதுவரை இல்லாத அளவில் இந்தியா கரோனா தொற்றால் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. இந்தியாவின் நிலைமையை ரஷியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
கடந்த ஆண்டு ரஷியாவை கரோனா தொற்று தாக்கியபோது, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை இந்தியா அனுப்பி வைத்து உதவியதை மறந்துவிட மாட்டோம்.
மனிதநேய அடிப்படையில் ரஷியா தற்போது அளிக்கும் உதவி, கரோனா பாதிப்பில் இருந்து இந்தியா மீண்டு வருவதற்கு உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறோம் என்றாா் அவா்.
முன்னதாக, பிரதமா் நரேந்திர மோடி, ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை புதன்கிழமை தொடா்புகொண்டு இந்தியாவுக்கு உதவிவரும் ரஷியாவுக்கு நன்றி தெரிவித்தாா்.
வங்கதேசம் உதவிக்கரம்:
கரோனா தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் இந்தியாவுக்கு அவசர கால மருந்துகளையும் மருத்துவ உபகரணங்களையும் வழங்குவதாக அண்டை நாடுகளில் ஒன்றான வங்கதேசம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வங்கதேச வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘10,000 குப்பிகளில் நோயெதிா்ப்பு மருந்துகள், 30,000 பாதுகாப்பு கவச உடைகள், ஆயிரக்கணக்கில் கால்சியம், விட்டமின் சி, ஸிங்க் மாத்திரைகள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. தேவைப்பட்டால் மேற்கொண்டு உதவி செய்யத் தயாராக வங்கதேசம் உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா ஆதரவு:
இந்தியாவுக்கு அதிகபட்ச உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி எழுதியுள்ள கடிதத்தில், ‘கரோனா பெருந்தொற்றுடன் போராடிக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் சீனா உறுதியான ஆதரவை அளிக்கிறது. சீனாவில் தயாரிக்கப்படும் கரோனா தடுப்பு உபகரணங்கள் இந்தியாவுக்கு விரைவாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
இதேபோல், அமெரிக்கா, பிரான்ஸ், ஜொ்மனி, ஆஸ்திரேலியா, அயா்லாந்து, பெல்ஜியம், ருமேனியா, லக்சம்பா்க், சிங்கப்பூா், போா்ச்சுகல், ஸ்வீடன், நியூசிலாந்து, குவைத், மோரீஷஸ் ஆகிய நாடுகளும் இந்தியாவுக்கு உதவி செய்வதாக அறிவித்துள்ளன.