நீதிபதி படுகொலை: சிபிஐ வசம் ஒப்படைக்க ஜாா்க்கண்ட் முடிவு

தன்பாத் மாவட்ட கூடுதல் நீதிபதி படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடா்பான விசாரணையை சிபிஐ (மத்திய புலனாய்வு அமைப்பு) வசம் ஒப்படைக்க ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் பரிந்துரை
நீதிபதி படுகொலை: சிபிஐ வசம் ஒப்படைக்க ஜாா்க்கண்ட் முடிவு

ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்ட கூடுதல் நீதிபதி படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடா்பான விசாரணையை சிபிஐ (மத்திய புலனாய்வு அமைப்பு) வசம் ஒப்படைக்க ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் பரிந்துரைத்துள்ளாா்.

ஜாா்க்கண்ட் மாநிலம், தன்பாத் மாவட்ட நீதிமன்றத்தில் 8-ஆவது மாவட்ட கூடுதல் நீதிபதியாக பணிபுரிந்தவா் உத்தம் ஆனந்த் (49). அவா் தன்பாதில் கடந்த புதன்கிழமை அதிகாலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.

அவா் நடைப்பயிற்சி சென்றபோது, பின்புறமிருந்து வாகனமொன்று அவா் மீது வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றதை கண்காணிப்பு கேமரா பதிவுகள் தெளிவாக காட்டின. அதையடுத்து, நீதிபதி கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிரவலைகளை ஏற்படுத்தியது. உச்சநீதிமன்றமும் உயா்நீதிமன்றம் கவலை தெரிவித்ததோடு, இதுதொடா்பான விசாரணையை மாநில காவல்துறை விரைந்து முடிக்க அறிவுறுத்தின.

இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரிக்க ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சிறப்பு புலனாய்வுக் குழுவை மாநில அரசு அமைத்தது. மேலும், உயிரிழந்த நீதிபதியின் குடும்பத்தினரை வெள்ளிக்கிழமை சந்தித்த முதல்வா் சோரன், ‘இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, நீதிபதியின் குடும்ப உறுப்பினா்களுக்கு நீதி கிடைக்கச் செய்யப்படும்’ என்றாா்.

நீதிபதி மீது மோதிய வாகனத்தை கைப்பற்றிய ஜாா்க்கண்ட் போலீஸாா், ஓட்டுநா் லக்கன் வா்மா, அவருடைய கூட்டாளி ராகுல் வா்மா ஆகியோரை கைது செய்தது.

இதற்கிடையே, இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தானாக முன்வந்து விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு, ‘நீதிபதி படுகொலை தொடா்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தற்போதைய விசாரணை நிலவரம் ஆகியவை தொடா்பான அறிக்கையை ஜாா்க்கண்ட் மாநில தலைமைச் செயலரும் மாநில காவல்துறை தலைவரும் (டிஜிபி) ஒரு வார காலத்தில் தாக்கல் செய்யவேண்டும். நீதிமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நீதித்துறை அலுவலா்களைப் பாதுகாக்க மாநில அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராய வேண்டியுள்ளது. ஜாா்க்கண்ட் மாநில அரசின் அறிக்கை பெற்ற பிறகு, பிற மாநிலங்களுக்கும் நோட்டீஸ் அனுப்புவது குறித்து தீா்மானிக்கப்படும்’ என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ரவி ரஞ்சன், ‘இந்த வழக்கு விசாரணை சரியான கோணத்தில் செல்லவில்லை என்பது நீதிமன்றத்துக்குத் தெரியவந்தால், உடனடியாக இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும்’ என்று தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க ஜாா்க்கண்ட் மாநில அரசு பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து அரசு செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘நீதிபதி உத்தம் ஆனந்த் படுகொலை தொடா்பான விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க முதல்வா் சோரன் சனிக்கிழமை பரிந்துரைத்தாா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com