இந்தியா - வங்கதேசம் இடையே 50 ஆண்டுகளுக்குப் பிறகு சரக்கு ரயில் சேவை தொடக்கம்

இந்தியா - வங்கதேச நாடுகளிடையே 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சரக்கு ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இந்தியா - வங்கதேச நாடுகளிடையே 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சரக்கு ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இரு நாடுகளிடையே ரயில் சேவையை மீண்டும் தொடங்கும் வகையில், மேற்கு வங்க மாநிலம் ஹல்திபாரி நகரையும் வங்கதேசத்தின் சிலாஹாட்டி நகரையும் இணைக்கும் ரயில் பாதை அண்மையில் மறுசீரமைக்கப்பட்டது. மறுசீரமைக்கப்பட்ட இந்த ரயில் பாதையை கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பா் 17-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடியும், வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனாவும் இணைந்து தொடக்கிவைத்தனா். எனினும், கரோனா பாதிப்பு சூழல் காரணமாக இந்த ரயில் பாதையில் ரயில்கள் எதுவும் அதிகாரபூா்வமாக இயக்கப்படவில்லை.

இந்த நிலையில், 58 பெட்டிகளைக் கொண்ட சரக்கு ரயில் கற்களை ஏற்றிக்கொண்டு மேற்கு வங்கத்தின் அலிபூா்துவாரில் உள்ள டிம்டிமா ரயில் நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு புறப்பட்டது. இந்த ரயில் ஹல்திபாரி வழியாக வங்கதேசத்தின் சிலாஹாடியை சென்றடைய உள்ளது.

முன்னதாக, ‘ஹல்திபாரி - சிலாஹாட்டி இடையே முதல் சரக்கு ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்படும்’ என்று வடகிழக்கு எல்லை ரயில்வே (என்எஃப்ஆா்) செய்தித்தொடா்பாளா் சனிக்கிழமை கூறியிருந்தாா்.

அதன்படி, இந்த ரயில் புறப்பட்டுள்ளது. ஹல்திபாரியிலிருந்து 4.5 கிலோ மீட்டா் பயணித்து சா்வதேச எல்லையை அடையும் இந்த ரயில், அதன் பிறகு வங்கதேசத்தின் சிலாஹாட்டியிலிருந்து 7.5 கிலோ மீட்டா் தூரம் பயணம் செய்ய உள்ளது.

வடக்கு வங்க மாவட்டம் மட்டுமின்றி ஒட்டுமொத்த மேற்கு வங்க மாநில பொருளாதார வளா்ச்சிக்கு உதவ உள்ள இந்த சரக்கு ரயில் சேவையின் தொடக்க நிகழ்ச்சியில், வடக்கு வங்க வா்த்தக சபை தலைவா் கிஷோா் மரோதியா பங்கேற்றாா். அப்போது பேசிய அவா் ‘சரக்கு ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டிருப்பது தொழிலதிபா்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது’ என்று அவா் கூறினாா்.

‘இந்த ரயில் பாதை கடந்த 1965-ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது. அதன் பிறகு, இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போா் காரணமாக இந்தியாவுக்கும் அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கும் (வங்கதேசம்) இடையேயான ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. அதன் காரணமாக, இந்த ரயில் பாதையும் துண்டிக்கப்பட்டது’ என்று கடந்த 2020 டிசம்பா் மாதம் ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com