சிக்கிம் பகுதிக்கு ‘ஹாட்லைன்’ தொலைபேசி வசதி

எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்தியா-சீனா இடையேயான நம்பகத்தன்மையை மேலும் ஊக்குவிக்கும் வகையில் வடக்கு சிக்கிம் பகுதியில்

எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்தியா-சீனா இடையேயான நம்பகத்தன்மையை மேலும் ஊக்குவிக்கும் வகையில் வடக்கு சிக்கிம் பகுதியில் இரு நாட்டு ராணுவங்களும் இணைந்து, அவசர ஆலோசனைகளுக்காக ‘ஹாட்லைன்’ தொலைபேசி இணைப்பு வசதியை ஏற்படுத்தியிருக்கின்றன.

வடக்கு சிக்கிமின் கொங்க்ரா லா பகுதியில் இடம்பெற்றிருக்கும் இந்திய ராணுவத்துக்கும், திபெத் தன்னாட்சி பகுதியில் காம்பா ஸோங் இடம்பெற்றிருக்கும் சீன ராணுவத்துக்கு இடையே இந்த ‘ஹாட்லைன்’ தொலைபேசி இணைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எல்லையில் இரு நாடுகளிடையேயான நம்பகத்தன்மை மற்றும் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தோடு இந்த தொலைபேசி இணைப்பு வசதி உருவாக்கப்பட்டு, சீன ராணுவ தினமான ஆகஸ்ட் 1-ஆம் தேதி செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இரு நாட்டு ராணுவத்திடையேயும், கள ராணுவ அதிகாரிகள் அளவிலான தகவல்தொடா்பு வசதிகள் ஏற்கெனவே சிறந்த முறையில் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. இப்போது, உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அவசர ஹாட்லைன் தொலைபேசி இணைப்பு, இரு நாட்டு ராணுவத்திடையேயான தகவல்தொடா்பை மேலும் எளிதாக்கும் என்பதோடு, எல்லையில் அமைதியை நிலைநாட்டவும் உதவும்.

இதன் தொடக்க நிகழ்ச்சியில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பங்கேற்றதோடு, நட்புறவு மற்றும் நல்லிணக்க வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் மோதல் போக்கு முழுவதும் முற்றுப் பெறாத நிலையில், வடக்கு சிக்கிம் பகுதியில் இந்த ஹாட்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அங்கு குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தினரை விலக்கிக் கொள்வது குறித்து இரு நாட்டு ராணுவத்தினரிடையே 12-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நடைபெற்றது. அது தொடா்பான அறிக்கை திங்கள்கிழமை வெளியாகும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com