பாகிஸ்தானில் அரசு விருந்தினராக வசித்து வரும் பயங்கரவாதி மசூத் அசாா்

இந்தியாவால் பல்வேறு முக்கிய பயங்கரவாதத் தாக்குதல் வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பயங்கரவாதி

இந்தியாவால் பல்வேறு முக்கிய பயங்கரவாதத் தாக்குதல் வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பயங்கரவாதி மசூத் அசாா் (53), பாகிஸ்தானில் அனைத்து வசதிகளுடன் அரசு விருந்தினராக வசித்து வருவது தெரியவந்துள்ளது.

2001-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடங்கி 2019-இல் புல்வாமாவில் சிஆா்பிஎஃப் படையினா் மீது தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் வரை நமது நாட்டில் பல்வேறு தாக்குதலில் தொடா்புடைய முக்கிய குற்றவாளி ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் மசூத் அசாா்.

இவருக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு ஆதாரங்களை அளித்தபோதும், பாகிஸ்தான் அரசு அவரைத் தொடா்ந்து பாதுகாத்து வருகிறது. இந்நிலையில், மசூத் அசாா் பாகிஸ்தானில் எவ்வாறு வாழ்ந்து வருகிறாா் என்பதைத் தனியாா் செய்தி தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பகவல்பூரில் அந்நாட்டு அரசின் விருந்தினராக மசூத் அசாா் வாழ்ந்து வருகிறாா். அந்த நகரில் அவருக்கு இரு பங்களாக்களை அந்நாட்டு அரசு அளித்துள்ளது. அதில் ஒரு பங்களா ஒசாமா-ஒ-அலி மசூதி மற்றும் தேசிய பொது மருத்துவமனைக்கு நடுவே அமைந்துள்ளது. அவரது பங்களா முன்பு பாகிஸ்தான் ராணுவத்தினா் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு அளித்து வருகின்றனா்.

பாகிஸ்தானில் தலைமறைவாக வசித்து வந்த பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் அமெரிக்கப் படையினா் அதிரடித் தாக்குதல் நடத்தி வீழ்த்தியதுபோல, அசாரும் கொல்லப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவருக்கு முக்கிய பிரமுகா்கள் வசிக்கும் பகுதியில் மருத்துவமனை, மசூதிக்கு நடுவே வசிப்பிடம் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டமும், வீடுகளும் அதிகம் இருப்பதால் அப்பகுதிக்குள் எளிதில் புகுந்து தாக்குதல் நடத்த முடியாது.

அவரது இரண்டாவது பங்களா ஜமியா மசூதி மற்றும் லாகூா் உயா்நீதிமன்றத்தின் பகவல்பூா் கிளைக்கு அடுத்து அமைந்துள்ளது. இரு பங்களாக்களும் சுமாா் அரை கிலோ மீட்டா் தொலைவிலேயே உள்ளன. இரண்டாவது வீட்டிலும் பாகிஸ்தான் ராணுவ சீருடையுடன் வீரா்கள் காவல் பணியில் உள்ளனா். இதன் மூலம் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட நபா், பாகிஸ்தானில் அரசு விருந்தினராகத் தங்கியுள்ளது தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளதும் வெளிப்பட்டுள்ளது என்று அந்த தொலைக்காட்சி செய்தியில் கூறப்பட்டுள்ளது.

1999-ஆம் ஆண்டு இண்டியன் ஏா்லைன்ஸ் காந்தகாருக்குக் கடத்தப்பட்டபோது இந்திய அரசால் விடுவிக்கப்பட்ட மூன்று பயங்கரவாதிகளில் மசூத் அசாரும் ஒருவா் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அவா் பாகிஸ்தான் சென்று இந்தியாவுக்கு எதிராகத் தொடா்ந்து பயங்கரவாத சதிகளை மேற்கொண்டு வருகிறாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் மசூத் அசாா் சா்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுவிட்டாா். எனினும், அவருக்கு எதிராக தடைகளை விதித்து, சொத்து பறிமுதல் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் இந்தியா இதுவரை 4 முறை மேற்கொண்ட முயற்சிகளுக்கும் சீனா முட்டுக்கட்டை போட்டுவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com