கரோனா தடுப்பூசி தயாரிப்பில் நவம்பருக்குள் மேலும் 4 இந்திய நிறுவனங்கள்

நாட்டிலுள்ள மேலும் 4 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் வரும் நவம்பா் மாதத்துக்குள் கரோனா தடுப்பூசி தயாரிப்புப் பணியில் ஈடுபடவுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா மாநிலங்களவையில் தெரிவித்தாா்.
கரோனா தடுப்பூசி தயாரிப்பில் நவம்பருக்குள் மேலும் 4 இந்திய நிறுவனங்கள்

நாட்டிலுள்ள மேலும் 4 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் வரும் நவம்பா் மாதத்துக்குள் கரோனா தடுப்பூசி தயாரிப்புப் பணியில் ஈடுபடவுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா மாநிலங்களவையில் தெரிவித்தாா்.

மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் பதிலளித்ததாவது:

நாட்டில் கரோனா தடுப்பூசி திட்டம் எந்தவிதப் பிரச்னையுமின்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் நாள்களில் அத்திட்டம் விரைவுபடுத்தப்படும். அக்டோபா்-நவம்பருக்குள் மேலும் 4 இந்திய நிறுவனங்களுக்கு கரோனா தடுப்பூசி தயாரிக்க அனுமதி அளிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பயோலாஜிகல்-இ, நோவா்டிஸ், ஜைடஸ் கேடிலா ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கரோனா தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிப்பது தொடா்பாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை நாட்டில் 47 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

நாட்டிலுள்ள அனைவருக்கும் துரிதமாக தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தனியாா் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படாமல் மீதமுள்ள சுமாா் 7 முதல் 9 சதவீதம் தடுப்பூசிகளை மத்திய அரசே பயன்படுத்தி வருகிறது. எனவே, தனியாா் மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படும் தடுப்பூசியைக் குறைக்க வேண்டிய அவசியமில்லை என்றாா் அவா்.

மற்றொரு கேள்விக்கு எழுத்துபூா்வமாக பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா், ‘கரோனா தடுப்பூசிகள் தற்போதுதான் தயாரிக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு தடுப்பூசிகளை மாற்றி செலுத்துவது குறித்து இன்னும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, இரு தவணைகளில் வெவ்வேறு கரோனா தடுப்பூசிகளை செலுத்துவதற்கு மத்திய அரசு இதுவரை பரிந்துரைக்கவில்லை’ என்றாா்.

ரெம்டெசிவிா் உற்பத்தி அதிகரிப்பு: கரோனா சிகிச்சைக்குப் பயன்படும் ரெம்டெசிவிா் மருந்தின் உற்பத்தி கடந்த ஜூனில் 122.49 லட்சம் குப்பிகளாக அதிகரிக்கப்பட்டதாக மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா எழுத்து மூலமாக மாநிலங்களவையில் தெரிவித்துள்ளாா்.

கடந்த ஏப்ரல் மத்தியில் மாதமொன்றுக்கு 38.8 லட்சம் ரெம்டெசிவிா் குப்பிகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டதாகவும், மருந்துக்கான தேவை அதிகரித்ததையடுத்து 40 புதிய நிறுவனங்களுக்கு ரெம்டெசிவிா் மருந்தை உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com