பெகாஸஸ் உளவு விவகாரம்: எஸ்ஐடி விசாரணைக் கோரி உச்சநீதிமன்றத்தில் எடிட்டா்ஸ் கில்ட் மனு

பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்கக் கோரி எடிட்டா்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா (இந்திய பத்திரிகை ஆசிரியா்கள் அமைப்பு) உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்கக் கோரி எடிட்டா்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா (இந்திய பத்திரிகை ஆசிரியா்கள் அமைப்பு) உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

பெகாஸஸ் உளவு மென்பொருள் மூலம் எதிா்க்கட்சித் தலைவா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்டோரின் செல்லிடப்பேசிகளில் ஊடுருவி அவா்களை மத்திய அரசு உளவு பாா்த்ததாக அண்மையில் இணையதள ஊடகம் சாா்பில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடா்பாக எடிட்டா்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கும் உரிமைக்காவும், நம்பகத்தன்மைக்காவும், அரசின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இருப்பதை உறுதி செய்யவும் பத்திரிகையாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

அரசின் நடவடிக்கைகள் மற்றும் செயலற்றத்தன்மை குறித்த தகவல்கள், விளக்கங்கள், அரசியலமைப்பின்படி செல்லுபடியாகும் காரணங்களை அறிந்து அவற்றுக்கு அரசின் அனைத்து கிளைகளையும் பொறுப்பாக்கும் கடமை அனைத்துப் பத்திரிகையாளா்களுக்கும் உள்ளது.

இந்தப் பணியை பூா்த்தி செய்வதற்கு பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். பத்திரிகையாளா்கள் தகவல்களை வழங்குவதில் அரசும் அதன் அமைப்புகளும் தலையிடாமல் இருப்பதில்தான் அந்தச் சுதந்திரம் உள்ளது. அந்தச் சுதந்திரத்தில் தகவல் அளிப்போரிடம் பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் பேசுதல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் குறித்து விசாரித்தல், அரசின் திறமையின்மையை வெளிபடுத்துதல், அரசுக்கு எதிரானவா்களிடம் பேசுதல் ஆகியவற்றில் தலையிடாமல் இருப்பதும் அடங்கும்.

எனவே பெகாஸஸ் மென்பொருள் மூலம் நாட்டு மக்கள், குறிப்பாக பத்திரிகையாளா்களை மத்திய அரசு உளவு பாா்த்த குற்றச்சாட்டு குறித்து உச்சநீதிமன்றம் சாா்பில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, அதன் மேற்பாா்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com