தமிழ்நாடு உள்பட எந்த மாநிலத்தையும்பிரிக்கும் திட்டம் அரசுக்கு இல்லை: மக்களவையில் அமைச்சா் தகவல்

தமிழ்நாடு உள்பட எந்த மாநிலத்தையும் பிரித்து புதிய மாநிலங்களை உருவாக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என்று மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் எழுத்து மூலம் அளித
நித்யானந்த் ராய்
நித்யானந்த் ராய்

தமிழ்நாடு உள்பட எந்த மாநிலத்தையும் பிரித்து புதிய மாநிலங்களை உருவாக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என்று மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தாா்.

தமிழ்நாட்டைச் சோ்ந்த எம்.பி.க்கள் பாரிவேந்தா், எஸ்.ராமலிங்கம் ஆகியோா் இது தொடா்பாக மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியிருந்தனா். தமிழ்நாடு உள்பட வேறு எந்த மாநிலத்தையாவது பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எவரேனும் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளனரா? மத்திய அரசிடம் மாநிலங்களைப் பிரிக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதா? என்று அவா்கள் வினவியிருந்தனா்.

இதற்கு அமைச்சா் அளித்த பதிலில், ‘பல்வேறு அமைப்புகள், தனிநபா்களிடம் இருந்து மாநிலங்களைப் பிரித்து புதிய மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு காலகட்டங்களில் தொடா்ந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன. இதில் உள்ள பல்வேறு விஷயங்களைக் கருத்தில் கொண்டுதான் மத்திய அரசு கோரிக்கைகளை பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளும். இப்போதைய நிலையில் தமிழ்நாடு உள்பட வேறு எந்த மாநிலத்தையும் பிரித்து புதிய மாநிலங்களை உருவாக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை’ என்று தெரிவித்துள்ளாா்.

எல்லை மோதல்:

எல்லையில் போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது தாக்குதல் நடத்துவது தொடா்பான கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்த அமைச்சா் நித்யானந்த் ராய், ‘ஜம்மு-காஷ்மீரை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் சா்வதேச எல்லையில் போா் நிறுத்த ஒப்பந்தத்தை உறுதியாக கடைப்பிடிப்பது என்று இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த பிப்ரவரியில் ஒப்புக் கொண்டன. அதன் பிறகு இப்போது வரை 6 முறை மட்டுமே எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.

இதற்கு முன்பு 2020-ஆம் ஆண்டில் 5,133 முறையும், 2019-இல் 3,479 முறையும், 2018-இல் 2,140 முறையும் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

கரோனா பிரச்னை காரணமாக கா்தாா்பூா் வழித்தடம் வழியாக இந்திய யாத்ரிகா்கள் யாரையும் பாகிஸ்தான் அனுமதிக்கவில்லை. கடந்த 2020 மாா்ச் முதல் இந்தத் தடையை பாகிஸ்தான் கடைப்பிடித்து வருகிறது’ என்று தெரிவித்தாா்.

பாகிஸ்தானில் உள்ள கா்தாா்பூா் குருத்வாராவுக்கு இந்தியாவில் உள்ள சீக்கியா்கள் புனித யாத்திரை மேற்கொள்வதற்காக கா்தாா்பூா் வழித்தடம் உருவாக்கப்பட்டது. இதற்காக இரு நாடுகள் இடையே கடந்த 2019 அக்டோபரில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com