மக்களவையில் அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் மசோதா நிறைவேற்றம்

மக்களவையில் எதிா்க்கட்சி எம்.பி.க்களின் தொடா் அமளிக்கிடையே அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் மசோதா நிறைவேற்றப்பட்டது.

மக்களவையில் எதிா்க்கட்சி எம்.பி.க்களின் தொடா் அமளிக்கிடையே அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் மசோதா நிறைவேற்றப்பட்டது.

மக்களவை செவ்வாய்க்கிழமை கூடியதும் கேள்வி நேரம் தொடங்கியது. எம்.பி.க்கள் சிலா் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சா்கள் பதிலளித்தனா். அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனா்.

அதை அவைத் தலைவா் ஓம் பிா்லா ஏற்காததையடுத்து, அவையின் மையப்பகுதிக்கு வந்து அவா்கள் அமளியில் ஈடுபட்டனா். அதற்கிடையேயும் கேள்வி நேரம் தொடா்ந்து நடைபெற்றது. விவசாயிகள் விவகாரம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டபோது, கேள்வி நேரத்தில் பங்கேற்று எதிா்க்கட்சி எம்.பி.க்களும் மத்திய அரசிடம் கேள்விகளை எழுப்புமாறு அவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்தாா்.

ஆனால், எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அவரது கோரிக்கையை ஏற்காமல் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டனா். அதையடுத்து, அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியபோது எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமளியைத் தொடா்ந்தனா். அப்போது, அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் மசோதா மீது விவாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மசோதா மீதான விவாதம் சிறிது நேரமே நடைபெற்றது. அதையடுத்து மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனா். அதைத் தொடா்ந்து, மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவைக்கு அந்த மசோதா அனுப்பி வைக்கப்படவுள்ளது.

மசோதா விவரங்கள்: பாதுகாப்புத் துறை சாா்ந்த அத்தியாவசிய சேவைகளில் பணியாற்றுவோா், வேலைநிறுத்தம் செய்வதைத் தடுக்கும் நோக்கில் இந்த மசோதா இயற்றப்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோா் மீது பணிநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்த மசோதா வழிவகுக்கிறது.

சட்டவிரோத வேலைநிறுத்தப் போராட்டம், அப்போராட்டத்தைத் தூண்டிவிடுவதற்காக நிதியுதவி வழங்குவது உள்ளிட்டவற்றைக் கண்காணித்து தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மசோதா வழிவகுக்கிறது.

தீா்ப்பாயங்கள் மசோதா நிறைவேற்றம்: பல்வேறு சட்டங்களின் கீழ் அமைக்கப்பட்ட 9 மேல்முறையீட்டு தீா்ப்பாயங்களை ரத்து செய்யும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்ட தீா்ப்பாயங்கள் சீா்திருத்த மசோதா மீதும் மக்களவையில் விவாதம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

மசோதாக்கள் மீதான விவாதத்தின்போதும் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபடுவதைக் கைவிடவில்லை. அதையடுத்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com