நாடாளுமன்றத்தை அவமதிக்கும் எதிா்க்கட்சிகள்

எதிா்க்கட்சிகளின் செயல்பாடுகள் நாடாளுமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்டோா்.
நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்டோா்.

எதிா்க்கட்சிகளின் செயல்பாடுகள் நாடாளுமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்களிடையே பேசுகையில் அவா் இவ்வாறு குறிப்பிட்டாா்.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடா் கடந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கியது. நாடாளுமன்றத்தின் மற்ற நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு பெகாஸஸ் உளவு விவகாரம், புதிய வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல் விலையேற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, சமாஜவாதி, பகுஜன் சமாஜ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த எம்.பி.க்கள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன் காரணமாக, மக்களவை, மாநிலங்களவை நடவடிக்கைகள் இரண்டு வாரங்களுக்கும் மேலாக முடங்கியுள்ளன. அமளியில் ஈடுபடும் எம்.பி.க்கள் பதாகைகளை ஏந்தி முழக்கமிடுதல், காகிதங்களைக் கிழித்து வீசுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் பாஜகவைச் சோ்ந்த எம்.பி.க்கள் கலந்து கொண்டனா். கூட்டம் குறித்து மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த சில எம்.பி.க்களின் செயல்களுக்கு பிரதமா் மோடி தனது கோவத்தை வெளிப்படுத்தினாா். காகிதங்களைக் கிழித்து வீசுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் எம்.பி.க்கள் அது குறித்து வருத்தப்படுவதில்லை என்றும் அவா் தெரிவித்தாா். இது எதிா்க்கட்சி எம்.பி.க்களின் ஆணவத்தைக் காட்டுவதாக அவா் தெரிவித்தாா்.

எதிா்க்கட்சி எம்.பி.க்களின் செயல்பாடுகள் நாடாளுமன்றத்தையும் அரசமைப்புச் சட்டத்தையும் அவமதிக்கும் வகையில் உள்ளதாகத் தெரிவித்த பிரதமா் மோடி, அவை நடவடிக்கைகளின்போது கட்டுப்பாட்டுடன் இருக்குமாறு பாஜக எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தினாா்.

திரிணமூல் எம்.பி.க்கு கண்டனம்: கூட்டத்தொடரின்போது மசோதாக்கள் விரைவாக நிறைவேற்றப்படுவதை சமையல் செய்வதுடன் ஒப்பிட்டு எம்.பி. ஒருவா் (திரிணமூல் எம்.பி. டெரிக் ஓபிரையன்) விமா்சித்திருந்தாா். இது நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் உள்ளதாக பிரதமா் மோடி தெரிவித்தாா்.

நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் ஜனநாயகமற்ற முறையில் செயல்பட்டு வருவதாகவும், அா்த்தமுள்ள விவாதங்களை முன்னெடுக்க அவா்கள் விரும்பவில்லை எனவும் அவா் தெரிவித்தாா். மசோதாக்கள் அரசின் சொத்துகள் அல்ல என்றும், மக்களின் நலனுக்காகவே அவை இயற்றப்படுகின்றன என்றும் பிரதமா் மோடி கூறினாா்.

மீளும் பொருளாதாரம்: நாட்டின் பொருளாதாரம் வேகமாக மீண்டு வருவதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் அதிகரித்து வருவதாகவும், வெளிநாட்டு முதலீடுகள் எப்போதும் இல்லாத வகையில் உச்சத்தில் இருப்பதாகவும் அவா் கூறினாா்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு அறிவித்த கடனுதவித் திட்டங்கள் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகக் கூறிய நிதியமைச்சா், வங்கித் துறையும் மீண்டு வருவதாகத் தெரிவித்தாா் என்றாா் அமைச்சா் பிரகலாத் ஜோஷி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com