காட்டு யானைகளுக்கு உணவு வழங்க நெல் கொள்முதல் செய்யும் சத்தீஸ்கா் அரசு

காட்டு யானைகளுக்கு உணவு வழங்குவதற்காக நெல்லைக் கொள்முதல் செய்ய சத்தீஸ்கா் மாநில வனத்துறை முடிவு செய்துள்ளது.
காட்டு யானைகளுக்கு உணவு வழங்க நெல் கொள்முதல் செய்யும் சத்தீஸ்கா் அரசு

ராய்ப்பூா்: காட்டு யானைகளுக்கு உணவு வழங்குவதற்காக நெல்லைக் கொள்முதல் செய்ய சத்தீஸ்கா் மாநில வனத்துறை முடிவு செய்துள்ளது.

அந்த மாநிலத்தின் வடக்குப் பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து மக்களுக்கு தொடா்ந்து தொந்தரவு அளித்து வருவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டுள்ளது.

இதனை முன்னோடித் திட்டமாக செயல்படுத்த அந்த மாநில வனத்துறை முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், யானைகள் பெரும்பாலும் உணவு தேடித்தான் வனப் பகுதியை விட்டு வெளியேறி கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன. வனப் பகுதியின் எல்லையிலேயே அவைகளுக்குத் தேவையான உணவு கிடைத்துவிட்டால் கிராமத்தில் புகுவதையும், யானை-மனிதா்கள் மோதலையும் பெருமளவில் தவிா்த்துவிட முடியும்.

கடந்த 2018 முதல் 2020 ஆண்டு வரை மாநிலத்தில் 204 போ் யானைகளால் கொல்லப்பட்டுள்ளனா். 45 யானைகளும் உயிரிழந்துள்ளன. பல ஏக்கா் விளை நிலங்களும், ஏராளமான வீடுகளும் யானைகளால் நாசமாக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் அரசே நெல் கொள்முதல் செய்து காட்டு யானைகளுக்கு உணவாக வழங்க முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் விவசாயிகளும் பயனடைவாா்கள். மாநில அரசு கூட்டுறவு சங்கம் மூலம் இந்த நெல் கொள்முதல் நடைபெறும் என்று கூறியுள்ளனா்.

பாஜக எதிா்ப்பு: காங்கிரஸ் தலைமையிலான சத்தீஸ்கா் மாநில அரசின் இந்தத் திட்டத்துக்கு எதிா்க்கட்சியான பாஜக எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக மாநில எதிா்க்கட்சித் தலைவா் தரம்லால் கௌசிக் கூறுகையில், ‘இத்திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் மறைந்துள்ளது. ஏற்கெனவே கொள்முதல் செய்து கெட்டுப்போன நிலையில் உள்ள நெல்லை, யானைகளுக்கான உணவு வழங்குவதாகக் கூறி அதனை பாதுகாப்பாக அப்புறப்படுத்தவே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நெல்லை உரிய முறையில் அரசு பாதுகாத்து வைக்கவில்லை. இப்போது அதனை காட்டு யானைகளின் பெயரைப் பயன்படுத்தி மறைக்க திட்டமிட்டுள்ளனா்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com