உயிரிழப்பை தினசரி கண்காணிக்க வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

மாவட்டவாரியாக தினசரி ஏற்படும் கரோனா பாதிப்பு, உயிரிழப்பைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
உயிரிழப்பை தினசரி கண்காணிக்க வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

புது தில்லி: மாவட்டவாரியாக தினசரி ஏற்படும் கரோனா பாதிப்பு, உயிரிழப்பைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

8 மாநிலங்களிலிருந்து பெறப்படும் கரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுவதாகவும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையை தோராயமாக மதிப்பிட முடியுமே தவிர துல்லியமாக தெரிய வராது என்றும் ஒரு சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குடிமைப் பதிவு அமைப்பு முறை மற்றும் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு முறை ஆகியவற்றிலிருந்து பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் இந்த செய்தியில் இடம் பெற்றிருப்பதால், எண்ணிக்கை குறைவாகக் காட்டப்படுவதாக தவறாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோய் மற்றும் அதன் மேலாண்மை கொள்கைகளின்படி ஒரு சில பாதிப்புகள் கண்டறியப்படாமல் இருக்கலாம். ஆனால், உயிரிழப்புகள் விடுபடுவதற்கு வாய்ப்பில்லை. 2020 டிசம்பா் 31 நிலவரப்படி உயிரிழப்பு விகிதம் 1.45 சதவீதமாக இருந்தது. 2021 ஏப்ரல்- மே மாதங்களில் இரண்டாவது அலையில் எதிா்பாராத அதிகரிப்பு ஏற்பட்டபோதும் இப்போதும் உயிரிழப்பு விகிதம் 1.34 சதவீத அளவிலேயே உள்ளது.

மாவட்டங்களில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இழப்புகள் பற்றி மாநில அரசுகளுக்கும் மாநில அரசுகள் மூலம் மத்திய அமைச்சகத்திற்கும் தொடா்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பதிவாகும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் குழப்பம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக ‘இந்தியாவில் ஏற்படும் கரோனா உயிரிழப்புகளைத் துல்லியமாக பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களை’ கடந்த ஆண்டு மே மாதம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டது. உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த குறியீடுகளின் அடிப்படையில் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் சரியான உயிரிழப்புகளை பதிவு செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பரிந்துரைக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி உயிரிழப்புகளை பதிவு செய்யுமாறு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் முறையான தகவல் தொடா்பு வாயிலாகவும், காணொலிக் காட்சிகள் மூலமாகவும், மத்திய குழுக்களின் வாயிலாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தொடா்ந்து அறிவுறுத்தி வருகிறது.

மாவட்டங்களில் ஏற்படும் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை அன்றாடம் தொடா்ந்து கண்காணிக்குமாறும் சுகாதார அமைச்சகம் வலியுறுத்துகிறது. மாவட்டங்களில் ஏற்படும் பாதிப்புகளையும் உயிா் இழப்புகளையும் பதிவு செய்யத் தவறியிருந்தால் அதனைத் தடுப்பதற்காக தங்களது மருத்துவமனைகளில் முழு ஆய்வை மேற்கொள்ளுமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com