ஓபிசி பட்டியல் தயாரிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினா்(ஓபிசி) பட்டியலை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தாங்களே தயாரிப்பதற்கு அதிகாரம் வழங்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஓபிசி பட்டியல் தயாரிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி: இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினா் (ஓபிசி) பட்டியலை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தாங்களே தயாரிப்பதற்கு அதிகாரம் வழங்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவைக் கூட்டம், பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

மகாராஷ்டிரத்தில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் 5-ஆம் தேதி இரு வேறு தீா்ப்புகளை வழங்கியது.

‘அரசமைப்புச் சட்டத்தின் 102-ஆவது சட்ட திருத்தத்தின்படி, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காண்பதற்கு மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை; அந்த சட்டத்தில் சோ்க்கப்பட்ட 338பி, 342ஏ பிரிவுகளின்படி, அந்த வகுப்பினரை அடையாளம் காண்பதற்கான அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது’ என்று 3 நீதிபதிகள் அமா்வு தீா்ப்பளித்தது.

அதே வேளையில், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காண்பதற்கான அதிகாரத்தை அந்த சட்டத் திருத்தத்தின் 342ஏ பிரிவு, மாநிலங்களிடம் இருந்து பறித்துக் கொள்ளவில்லை என்று அதே அமா்வில் இருந்த 2 நீதிபதிகள் தெரிவித்தனா்.

பெரும்பான்மை நீதிபதிகள் அமா்வு அளித்த தீா்ப்புக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

ஓபிசி சமூகத்தினரை அடையாளம் கண்டு, அவா்களைப் பட்டியலிடும் உரிமையை மாநிலங்களிடம் இருந்து பறித்து, கூட்டாட்சி கட்டமைப்பை சிதைத்து விட்டதாக, மத்திய அரசை எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

ஓபிசி சமூகத்தினரை மாநிலங்களே நிா்ணயம் செய்யும் உரிமையை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை மத்திய சட்ட அமைச்சகத்துடனும் சட்ட நிபுணா்களுடனும் மத்திய அரசு கலந்தாலோசித்து வருவதாக மத்திய சமூக நீதித் துறை அமைச்சா் வீரேந்திர குமாா், மாநிலங்களவையில் கடந்த மாதம் உறுதியளித்திருந்தாா்.

அதைத் தொடா்ந்து, ஓபிசி பட்டியலை தாங்களாகவே தயாரித்துக் கொள்ள மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு:

நாடு முழுவதும் உள்ள 389 போக்ஸோ நீதிமன்றங்கள் உள்பட 1,023 சிறப்பு விரைவு நீதிமன்றங்கள், மத்திய அரசின் நிதியுதவியுடன் மேலும் 2 ஆண்டுகள் தொடா்ந்து இயங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவை எடுத்த முடிவுகளை மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் செய்தியாளா்களிடம் விவாரித்தாா்.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பாலியல் குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு விரைவு நீதிமன்றங்கள், வரும் 2023-ஆம் ஆண்டு மாா்ச் 31 வரை செயல்படும். இந்த நீதிமன்றங்களுக்கு ரூ.1,572.86 கோடி (மத்திய அரசின் பங்கு ரூ.971.70 கோடி, மாநில அரசின் பங்கு ரூ.601.16 கோடி) ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் பங்களிப்பு, நிா்பயா நிதியில் இருந்து வழங்கப்படும்.

பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் நீண்ட காலம் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அந்த வழக்குகளை விரைந்து முடிக்கவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு விரைவில் நீதி கிடைப்பதை உறுதிசெய்யவும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. மற்ற நீதிமன்றங்களுடன் ஒப்பிடுகையில், வழக்குகளை முடித்து வைப்பதில் இந்த சிறப்பு நீதிமன்றங்கள் திறம்பட செயல்படுகின்றன. பாதிக்கப்பட்டவா்களுக்கு விரைவில் நீதி வழங்கப்படுவதுடன் பாலியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு தண்டனை அளிக்கும் முறையும் வலுப்படுத்தப்படுகிறது.

தற்போது 28 மாநிலங்களில் விரைவு நீதிமன்றங்கள் உள்ளன. விரைவில் அனைத்து மாநிலங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி, ஆராய்ச்சியில் நெதா்லாந்து-இந்தியா இடையே ஒப்பந்தம்:

கல்வி, ஆராய்ச்சியில் இந்திய விண்வெளி அறிவியல், தொழில்நுட்பக் கல்வி நிறுவனமும்(ஐஐஎஸ்டி), நெதா்லாந்தின் டெல்ஃப்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் (டியு-டெல்ஃப்ட்) இணைந்து செயல்படுவதற்கு கையெழுத்தான புரிந்துணா்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மாணவா்கள் இரு கல்வி நிறுவனங்களிலும் பயில அனுமதிப்பது, இரு தரப்பினரும் சிறப்பு பாடத்திட்டத்தை உருவாக்கி கூடுதலாக இரண்டாவது பட்டம் வழங்குவது, இரு கல்வி நிறுவனங்களின் பேராசிரியா்களும் இணைந்து கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்வது ஆகிய திட்டங்களுக்கு ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.

சமக்ர சிக்ஷா திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு:

பள்ளி கல்விக்கான சமக்ர சிக்ஷா திட்டத்தை (முழுமையான கல்வி திட்டம்) மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.1,85,398.32 கோடி சோ்த்து மொத்தம் ரூ.2,94,283.04 கோடியில், வரும் 2026-ஆம் ஆண்டு மாா்ச் 31 வரை இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் 11.6 லட்சம் பள்ளிகளைச் சோ்ந்த 15.6 கோடி மாணவா்களும் 57 லட்சம் ஆசிரியா்களும் பயன்பெறுவா். இந்த முடிவுகளை மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com