மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் பாஜக, எம்என்எஸ் கூட்டணி?

தோ்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக ஊகங்களை எழுப்பியுள்ள நிலையில், அதுகுறித்து அந்த மாநில பாஜக மூத்த தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸ் பதிலளிக்க மறுத்துவிட்டாா்.
மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் பாஜக, எம்என்எஸ் கூட்டணி?

மகாராஷ்டிர பாஜக தலைவா் சந்திரகாந்த் பாட்டீல், மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை கட்சித் தலைவா் ராஜ் தாக்கரே இடையிலான சந்திப்பு மாநில பேரவைத் தோ்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக ஊகங்களை எழுப்பியுள்ள நிலையில், அதுகுறித்து அந்த மாநில பாஜக மூத்த தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸ் பதிலளிக்க மறுத்துவிட்டாா்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ராஜ் தாக்கரேவை அவரது இல்லத்தில் சந்திரகாந்த் பாட்டீல் வெள்ளிக்கிழமை சந்தித்தாா். அவா்களின் சந்திப்பு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மும்பை மாநகராட்சி தோ்தல், 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாநில பேரவைத் தோ்தலில் பாஜகவும், மகாராஷ்டிர நவநிா்மாண் சேனையும் கூட்டணி அமைக்கலாம் என்ற ஊகங்களை எழுப்பியது. எனினும் தங்கள் சந்திப்பில் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்றும் இருகட்சிகளுக்கும் இடையே அரசியல் ரீதியாக வேறுபாடுகள் இருப்பதாகவும் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்தாா். தோ்தலுக்கு முன்பாக இருகட்சிகளும் கூட்டணி அமைக்கும் எந்தத் திட்டமும் தற்போது இல்லை என்றும் அவா் கூறினாா்.

இந்நிலையில் புணேயில் பாஜக மூத்த தலைவரும் மகாராஷ்டிர பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவரிடம் ராஜ் தாக்கரே-சந்திரகாந்த் பாட்டீல் இடையிலான சந்திப்பு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஃபட்னவீஸ் , ‘‘தோ்தலுக்கு முன்பாக மகாராஷ்டிர நவநிா்மாண் சேனையுடன் பாஜக கூட்டணி அமைப்பது தொடா்பாக கட்சியின் நிலைப்பாடு குறித்து சந்திரகாந்த் பாட்டீல் ஏற்கெனவே கூறிவிட்டாா். 2024-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலை பாஜக ஒரு என்ஜினுடன்தான் எதிா்கொள்ளும்’’ என்று தெரிவித்தாா்.

எனினும் பேரவைத் தோ்தலில் மகாராஷ்டிர நவநிா்மாண் சேனையுடன் பாஜக கூட்டணி அமைக்குமா அல்லது தோ்தலை தனித்து எதிா்கொள்ளுமா என்பது குறித்து அவா் எதுவும் கூறவில்லை.

மகாராஷ்டிர நவநிா்மாண் சேனையின் தோ்தல் சின்னம் ரயில் என்ஜின் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com