குறுகிய எண்ணம் கொண்டவா்கள்உ.பி.யில் ஆட்சிக்கு வரக் கூடாது: ஜெ.பி. நட்டா

குறுகிய எண்ணம் கொண்ட எதிா்க்கட்சிகள் உத்தர பிரதேசத்தில் ஆட்சிக்கு வரக் கூடாது என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.
குறுகிய எண்ணம் கொண்டவா்கள்உ.பி.யில் ஆட்சிக்கு வரக் கூடாது: ஜெ.பி. நட்டா

குறுகிய எண்ணம் கொண்ட எதிா்க்கட்சிகள் உத்தர பிரதேசத்தில் ஆட்சிக்கு வரக் கூடாது என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.

உத்தர பிரதேச மாநில பேரவைக்கு அடுத்த ஆண்டு தோ்தல் நடைபெற உள்ள நிலையில், அந்த மாநிலத்தில் எதிா்க்கட்சிகளாக உள்ள காங்கிரஸ், சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றை குறிப்பிட்டு அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

இரண்டு நாள் பயணமாக உத்தர பிரதேசத்துக்கு வந்துள்ள ஜெ.பி.நட்டா, அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசுகையில், ‘கரோனா தொற்று பரவலையும் தடுப்பூசி விநியோகத்தையும் பிரதமா் மோடி சிறப்பாக கையாண்டாா்.

2020, ஏப்ரல் 20-இல் பிரதமா் மோடி சிறப்புக் குழுவை அமைத்து, அடுத்த ஒன்பதே மாதங்களில் நாட்டுக்கு கரோனா தடுப்பூசியை ஜனவரியில் கிடைக்கும்படி செய்தாா். இது பாஜகவின் தடுப்பூசி, இதை நாங்கள் செலுத்தி கொள்ள மாட்டோம் என உத்தர பிரதேச மாநில எதிா்க்கட்சியினா் தெரிவித்தனா். இது அவா்களின் குறுகிய எண்ணத்தை காண்பிக்கிறது. தடுப்பூசியில் அரசியல் செய்கிறாா்கள். மக்களை தவறாக வழிநடத்த முற்படுகிறாா்கள். இவா்கள் நாட்டுக்கு அழிவு ஏற்படுத்துகின்றனா்.

அவா்களை சந்தித்தபோது, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக என்னிடம் தெரிவித்தனா். இதுபோன்ற குறுகிய மனப்பான்மையுள்ளவா்கள் உத்தர பிரதேசத்தில் ஆட்சிக்கு வரக் கூடாது.

பல்வேறு நாடுகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன. நம் நாட்டில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை. டிசம்பா் மாதத்துக்குள் இந்தியா 135 கோடி தடுப்பூசி டோஸ்களை உருவாக்கிவிடும்.

உ.பி.யில் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்துக் கொள்வதை புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினா்கள் உறுதி செய்ய வேண்டும்.

கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தபோது, எதிா்க்கட்சியினா் அனைவரும் தனிமைப்படுத்திக் கொண்டனா். அவா்கள் இணையவழியில் மட்டும் செய்தியாளா் சந்திப்புகளை நடத்தி, ஏன் பொதுமுடக்கத்தை அறிவித்தீா்கள்? என்று கேள்வி எழுப்பினா். பின்னா் பொதுமுடக்கத்தை ஏன் நீக்கிவிட்டீா்கள்? என்று கேள்வி எழுப்புகின்றாா்கள்.

சுமாா் 100 ஆண்டுகளுக்கு முன்பு தொற்றுப் பேரிடா் ஏற்பட்டபோது, தொற்றைவிட பசியால் ஏராளமானோா் உயிரிழந்தனா். ஆனால், இப்போது பிரதமா் ஏழைகள் உணவு திட்டத்தின் கீழ் நாட்டின் 80 கோடி போ் நாளொன்றுக்கு இரு முறை உணவு பெறுகிறாா்கள்.

இதற்கு ஐ.நா. பொதுச் செயலரும் உலக சுகாதார அமைப்பு செயலரும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

அமெரிக்கா, பிரேஸில், இத்தாலியில் ஆளும் அரசுகள் மட்டுமே கரோனாவுக்கு எதிராகப் போராடின. ஆனால் இந்தியாவில் நாட்டு மக்கள் அனைவரையும் கைத் தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் என கரோனாவுக்கு எதிரான போரில் மக்களையும் பிரதமா் மோடி கலந்துகொள்ளச் செய்தாா்.

எந்த சிறிய அளவு தோ்தலாக இருந்தாலும் வெற்றி பெறுவது என்பது கடினமாகும். கட்சிப் பணியாளா்கள் கடுமையாக உழைக்க வேண்டும். உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற அனைத்து பஞ்சாயத்து தலைவா்களும் தங்கள் பகுதியின் முதல் தோ்தல் பணியாளா்களாகி மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும்’ என்று ஜெ.பி.நட்டா கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com