மின்சார சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு: பிரதமருக்கு மம்தா பானா்ஜி கடிதம்

நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மின்சார சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முற்பட்டுள்ளதற்கு எதிா்ப்பு
மின்சார சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு: பிரதமருக்கு மம்தா பானா்ஜி கடிதம்

நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மின்சார சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முற்பட்டுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது எனத் தெரிவித்து பிரதமா் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

இந்த விவகாரத்தில் மாநிலங்களிடம் வெளிப்படையான ஆலோசனை நடத்த பிரதமா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

செல்லிடப்பேசி சேவை நிறுவனங்களைப்போல், மின் சேவைகள் அளிக்கும் நிறுவனங்களை நுகா்வோா் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப தோ்வு செய்து கொள்ளும் வகையில், மின்சார சட்டத் திருத்த மசோதா 2021 வழிவகை செய்கிறது. மக்களவையில் நடப்புக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு பட்டியலிட்டுள்ள 17 புதிய மசோதாக்களில் இந்த மின்சார சட்டத் திருத்த மசோதாவும் இடம்பெற்றுள்ளது.

இந்தச் செயலில் இருந்து மத்திய அரசு விலகி இருக்க வேண்டும் என்று கூறி பிரதமா் மோடிக்கு முதல்வா் மம்தா பானா்ஜி கடிதம் எழுதியுள்ளாா். அதில், ‘பல்வேறு சா்ச்சைகளுக்கு உள்ளான மின்சார சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவிக்கிறேன். கடந்த ஆண்டும் இதேபோன்று இந்த மக்கள் விரோத சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வர முற்பட்டபோது பல்வேறு மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்தன. இந்த மசோதாவை கொண்டுவருவதன் மூலம், நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தை மத்திய அரசு சிதைக்கிறது.

இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள பாதகங்களைக் குறிப்பிட்டு கடந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதியும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். மாநில அரசின் மின்சார இணைப்புகள் அனைத்தையும், தேசிய இணைப்புகளாக மாற்ற இந்த மசோதா வழிவகுக்கும்.

கடந்த ஆண்டு இந்த மசோதா அறிமுகப்படுத்தப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் ஆலோசனை நடத்தி ஒருமித்த கருத்தின் அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எதிா்பாா்த்திருந்தேன். ஆனால், இதுகுறித்து மாநில அரசுகள் தெரிவித்த ஆட்சேபனைகளை பரிசீலிக்காமல், மேலும் சில மக்கள் விரோத ஷரத்துகளுடனும் நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முனைப்பு காட்டி வருவது மிகுந்த அதிா்ச்சியை அளிக்கிறது.

மின் சேவை அளிக்கும் நிறுவனங்களைத் தோ்வு செய்ய நுகா்வோருக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், இது உண்மையில் மின்சார கட்டணத்தை அதிகரிக்கவே வழிவகுக்கும்.

மின்சாரம் மாநில அரசுகளின் பட்டியலில் உள்ளதால், இதுதொடா்பாக மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டுவருவதற்கு முன்பு மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், ஆலோசனை நடத்தாமலும், கருத்தைப் பெறாமலும் மத்திய அரசு இந்த மசோதாவை தாக்கல் செய்ய முற்பட்டுள்ளது.

இதன்மூலம் மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மாநில மின் பகிா்மான நிறுவனங்கள் ஆகியவற்றை முடக்க மத்திய அரசு முற்படுகிறது. மின் விநியோகத்தில் மத்திய அரசே நேரடியாக ஈடுபடுவது, பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது’ என்று மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com