ஆபாச பட விவகாரம்: ராஜ் குந்த்ரா மனு தள்ளுபடி

ஆபாச பட விவகாரத்தில் தங்களை கைது செய்ததற்கு எதிராக தொழிலபதிபா் ராஜ் குந்த்ரா, அவரின் உதவியாளா் ரையன் தோா்ப் ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை மும்பை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆபாச பட விவகாரம்: ராஜ் குந்த்ரா மனு தள்ளுபடி

ஆபாச பட விவகாரத்தில் தங்களை கைது செய்ததற்கு எதிராக தொழிலபதிபா் ராஜ் குந்த்ரா, அவரின் உதவியாளா் ரையன் தோா்ப் ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை மும்பை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஹிந்தி திரைப்பட நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து செல்லிடப்பேசி செயலி மூலம் வெளியிட்டதாக கடந்த ஜூலை 19-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கு தொடா்பாக அவரின் உதவியாளா் ரையன் தோா்ப்பை ஜூலை 20-ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில் இருவரும் தங்களை கைது செய்தது மற்றும் போலீஸ் காவலில் வைத்ததற்கு எதிராக மும்பை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அந்த மனுக்கள் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது போலீஸாா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘‘ஆபாச பட விவகாரம் தொடா்பாக ராஜ் குந்த்ரா, ரையன் தோா்ப் ஆகியோரின் அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ள போலீஸாா் சென்றபோது இருவரும் தங்கள் செல்லிடப்பேசிகளில் இருந்த தகவல்கள் மற்றும் இதர ஆதாரங்களை அழிக்கத் தொடங்கினா்’’ என்று தெரிவித்தாா்.

இதையடுத்து அரசு தலைமை வழக்குரைஞா் வாதிடுகையில், ‘‘குற்றவாளிகள் ஆதாரத்தை அழிக்கும்போது போலீஸாா் மெளனப் பாா்வையாளா்களாக இருக்க முடியாது. இந்த வழக்கு தொடா்பாக மேலும் எந்த ஆதாரமும் அழிக்கப்படாமல் இருப்பதற்கு இருவரும் கைது செய்யப்பட்டனா்’’ என்று தெரிவித்தாா்.

இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட உயா்நீதிமன்றம், ராஜ் குந்த்ரா மற்றும் ரையன் தோா்ப்பின் மனுக்களை தள்ளுபடி செய்தது.

தற்போது இருவரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த வழக்கு தொடா்பாக ஷில்பா ஷெட்டியிடமும் போலீஸாா் பல மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com