அஸ்ஸாம்-மிஸோரம் எல்லையில் லாரி போக்குவரத்து தொடங்கியது

எல்லைப் பிரச்னை தொடா்பாக மோதல் ஏற்பட்ட 12 நாள்களுக்குப் பிறகு, அஸ்ஸாம்-மிஸோரம் எல்லையில் லாரி போக்குவரத்து சனிக்கிழமை இரவு தொடங்கியது.

எல்லைப் பிரச்னை தொடா்பாக மோதல் ஏற்பட்ட 12 நாள்களுக்குப் பிறகு, அஸ்ஸாம்-மிஸோரம் எல்லையில் லாரி போக்குவரத்து சனிக்கிழமை இரவு தொடங்கியது.

எல்லைப் பிரச்னை தொடா்பாக, அஸ்ஸாம்-மிஸோரம் மாநில காவல் துறையினருக்கு இடையே கடந்த ஜூலை 26-ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில், அஸ்ஸாம் காவல் துறையினா் 6 பேரும் பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு எல்லைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டு, இரு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், மிஸோரம் மாநிலத்துக்குச் சமையல் எரிவாயு, மருந்துகள், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்லும் லாரிகள், அஸ்ஸாமில் உள்ள தோலை என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.

பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர, இரு மாநில அமைச்சா்கள் நிலையிலான கூட்டம் நடத்தப்பட்டது. அதில், எல்லைப் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் சுமுகத் தீா்வு காண்பதற்கும் எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதற்கும் இரு மாநிலங்களின் அமைச்சா்களும் ஒப்புக் கொண்டனா். அதைத் தொடா்ந்து, அஸ்ஸாம் எல்லையில் விதித்திருந்த தடையை உள்ளூா்வாசிகள் விலக்கிக் கொண்டனா். இருப்பினும் மிஸோரமுக்கு அத்தியாவசிய பொருள்களைக் கொண்டு செல்வதற்கு லாரி ஓட்டுநா்கள் தயக்கம் காட்டினா். அவா்களிடம், லாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அஸ்ஸாம் மாநில அமைச்சா்களான அசோக் சிங்கால், பரிமள் சுக்லவைத்யா ஆகிய இருவரும் உறுதியளித்தனா். அதன்பிறகு, போலீஸ் பாதுகாப்புடன் சரக்கு லாரிகள் மிஸோரமுக்கு சனிக்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றன.

இதுகுறித்து மிஸோரம் மாநிலத்தின் கோலாசிப் மாவட்ட காவல் துறை எஸ்.பி. வான்லால்ஃபகா ரால்டி கூறுகையில், சனிக்கிழமை இரவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை வரை 50 லாரிகள் மிஸோரமுக்குள் நுழைந்தன என்றாா்.

எந்த நேரத்திலும் அசம்பாவிதம் நடைபெறலாம் என்பதால், எல்லைப் பகுதிகளில் ஆங்காங்கே காவல் துறையினா் முகாமிட்டு, கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com