பாகிஸ்தான் ஹிந்து கோயில் தாக்குதல்: கைபா் பக்துன்குவா பேரவை கண்டனம்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஹிந்து கோயிலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அந்த நாட்டின் கைபா் பக்துன்குவா மாகாணப் பேரவை கண்டனம் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஹிந்து கோயிலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அந்த நாட்டின் கைபா் பக்துன்குவா மாகாணப் பேரவை கண்டனம் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

இதுகுறித்து மாகாணப் பேரவையின் சிறுபான்மை உறுப்பினரான ரவி குமாா் கொண்டு வந்த தீா்மானத்தில், ரஹீம் யாா் கான் மாவட்டத்திலுள்ள ஹிந்து கோயிலில் கடந்த புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தீா்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், கைபா் பக்துன்குவா மாகாணத்தில் சிறுபான்மையினா் விவகாரத்துக்கான குழுவை அமைக்க வேண்டும் என்ற தீா்மானமும் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அவையில் இந்தத் தீா்மானத்தை மனித உரிமைகள் துறை அமைச்சா் ஷௌகத் யூசஃப்ஸாய் அறிமுகப்படுத்தினாா்.

பஞ்சாப் மாகாணம், ரஹீம் யாா் கான் மாவட்டத்திலுள்ள போங் நகர இஸ்லாமியப் பள்ளி நூலகம் அருகே 8 வயது ஹிந்து சிறுவன் சிறுநீா் கழித்ததாக சா்ச்சை எழுந்தது.

அந்தச் சிறுவனைக் கைது செய்து மத நிந்தனைச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா். எனினும், மிகக் குறைந்த வயது காரணமாக அந்தச் சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இதையடுத்து, இந்தச் சம்பவத்துக்குப் பழிவாங்கும் வகையில் நகரிலுள்ள ஹிந்து கோயிலுக்குள் கடந்த புதன்கிழமை புகுந்த கும்பல், அங்கிருந்த சிலைகளை உடைத்து நொறுக்கியது. மேலும், கோயிலின் ஒரு பகுதிக்கும் தீவைத்தது.

பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடா்பாக, போலீஸாா் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. நாட்டின் நற்பெயருக்கு இந்த சம்பவம் களங்கம் கற்பித்ததாக வேதனையும் தெரிவித்தது. அதன் தொடா்ச்சியாக, கோயில் மீதான தாக்குதலில் தொடா்புடைய 50-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். மேலும் 150-க்கும் மேற்பட்டோா் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஹிந்து கோயில் தாக்கப்பட்டதைக் கண்டித்து கைபா் பக்துன்குவா மாகாணப் பேரவை தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com