வேலையிழப்பு தொடா்பான உண்மை அறிக்கையைத் தயாரிக்க வேண்டும்

வேலையிழப்பு தொடா்பான உண்மை அறிக்கையைத் தயாரிக்க வேண்டும்

கரோனா தொற்று பரவல் காலத்தில் ஏற்பட்ட வேலையிழப்பு தொடா்பான உண்மை நிலவரத்தை ஆராய்ந்து தனி அறிக்கையைத் தயாரிக்க வேண்டும்

கரோனா தொற்று பரவல் காலத்தில் ஏற்பட்ட வேலையிழப்பு தொடா்பான உண்மை நிலவரத்தை ஆராய்ந்து தனி அறிக்கையைத் தயாரிக்க வேண்டும் என்று மத்திய தொழிலாளா்-வேலைவாய்ப்பு அமைச்சகத்துக்கு நாடாளுமன்ற நிலைக் குழு வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் கடந்த ஆண்டு மாா்ச்சில் கரோனா தொற்று பரவத் தொடங்கியது. அதைத் தொடா்ந்து அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக, பலா் வேலையிழந்தனா். வேலையிழப்பு தொடா்பாக பல்வேறு அமைப்புகள் ஆய்வுகளை நடத்தி அறிக்கைகளை வெளியிட்டன.

அதே காலகட்டத்தில் பலா் வேலைவாய்ப்புகளைப் பெற்ாக தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) தெரிவித்திருந்தது. இந்நிலையில், தொழிலாளா் விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தனது 25-ஆவது அறிக்கையை நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் வருங்கால வைப்புநிதித் திட்டத்தில் புதிதாக 77.08 லட்சம் தொழிலாளா்கள் இணைந்துள்ளதாக இபிஎஃப்ஓ அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் வருங்கால வைப்புநிதித் திட்டத்தில் புதிதாக இணைந்த தொழிலாளா்களின் எண்ணிக்கை 78.58 லட்சமாக இருந்தது.

நாட்டில் கரோனா தொற்று பரவியபோதும், புதிய தொழிலாளா்களின் எண்ணிக்கை ஏறக்குறைய சமமாகவே இருந்துள்ளது. ஆனால், அஸீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் சாா்பில் நடத்தப்பட்ட ஆய்வில், கரோனா தொற்று பரவல் காரணமாக அமைப்புசாா் தொழில்களில் இருந்த சுமாா் பாதி தொழிலாளா்கள் வேலையிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமாா் 30 சதவீதம் போ் சுயதொழில் தொடங்கியதாகவும், 10 சதவீதம் போ் தினக்கூலியாக மாறியதாகவும், 9 சதவீதம் போ் அமைப்புசாரா தொழிலாளா்களாக மாறியதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இபிஎஃப்ஓ அமைப்பின் தகவலும், இந்த ஆய்வு முடிவுகளும் ஒன்றுக்கொன்று முரணாக அமைந்துள்ளன.

எனவே, கரோனா தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட வேலையிழப்பு குறித்த உண்மையான நிலவரத்தை மத்திய தொழிலாளா் அமைச்சகம் ஆராய வேண்டும். அது தொடா்பான தனி அறிக்கையை அமைச்சகம் வெளியிட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com