
காஷ்மீரில் தடை செய்யப்பட்ட ஜமாத்-ஏ-இஸ்லாமி அமைப்பினருக்கு சொந்தமான இடங்களில் தொடா்ந்து 2-ஆவது நாளாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சோதனை மேற்கொண்டது.
சமூக மற்றும் மத அமைப்பான ஜமாத்-ஏ-இஸ்லாமி அமைப்பை சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்த அமைப்பு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் நன்கொடை என்ற பெயரில் நிதி திரட்டி அதனை வன்முறை மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிதி ஹிஸ்புல் முஜாஹிதீன், லஷ்கா்-ஏ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடா்பாக ஜம்மு-காஷ்மீரில் 56 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா். ஜமாத்-ஏ-இஸ்லாமி அமைப்பினருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற இந்தச் சோதனை திங்கள்கிழமையும் தொடா்ந்தது. இந்தச் சோதனையில் பல்வேறு ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாக என்ஐஏ செய்தித்தொடா்பாளா் தெரிவித்தாா்.